கோவை கார் சம்பவம்: இரண்டு பேரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!!

Published on
Updated on
1 min read

கோவை கார் சிலிண்டர் வெடி வழக்கில் மேலும் இரண்டு பேருக்கு எட்டு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி

கோவை, உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்ததில் ஜமேசா முபீன் என்பவர் பலியானார். இந்த வழக்கு தேசிய புலனாய்வு சிறப்பு போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் பல்வேறு ஆவணங்கள் அடிப்படையில் இதுவரை இந்த வழக்கில் 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் பலரை தேசிய புலனாய்வு சிறப்பு போலீசார் காவலில் எடுத்தும் விசாரித்து வந்தனர். தற்போது இந்த வழக்கில் கோயம்புத்தூரை சேர்ந்த முகமது இர்தியாஸ், முகமது அசாருதீன் (என்ற) அசார் ஆகிய இரண்டு பேரை மேலும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட  இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் மனு அளித்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை வந்த நிலையில் இரண்டு பேருக்கும், எட்டு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி இளவழகன் அனுமதி அளித்தார். 

மேலும் போலீஸ் காவல் முடிந்து இருவரையும் வரும் 29 ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் இருவரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ள அழைத்து சென்றனர். 

இருவரிடம் விசாரணை முடிந்த பிறகு இந்த வழக்கில் கூடுதலாக மேலும் சிலர் கைது செய்யப்படலாம் எனவும் இவர்கள் தீட்டிய சதித்திட்டம் என்ன என்பது குறித்து தெரிய வரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com