சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கம்பி கதவுகளை உடைத்து சிறுவர்கள் தப்பியோட்டம்....!!

சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கம்பி கதவுகளை உடைத்து சிறுவர்கள் தப்பியோட்டம்....!!
Published on
Updated on
1 min read

சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அறை கம்பி கதவுகளை உடைத்து 6 சிறுவர்கள் தப்பியோடியுள்ளனர்.  அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சீர்திருத்த பள்ளி:

18 வயதுக்கு கீழ் உள்ளோர் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பது வழக்கம்.  அந்த வகையில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 23 சிறுவர்கள் கெல்லிசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பட்டு உள்ளனர். 

கதவு உடைப்பு:

இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் சிறுவர்கள் அடைக்கப்பட்டிருந்த கதவு உடைப்பது போன்ற சத்தம் காவலாளிக்கு கேட்டதால், உடனடியாக சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு சிலர் தப்பி சென்றது தெரிய வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி இது குறித்து உடனடியாக தலைமைச் செயலக காலனி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.  

விசாரணை:

இதையடுத்து போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்திய போது,  மணலி காவல் நிலையத்தில் குற்றவழக்கு ஒன்றில் கைதான 18 வயது சிறுவன் ஒருவன், கெல்லிசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கடந்த இரண்டாம் தேதி முதல் அடைக்கப்பட்டுள்ளார்.  இந்த சிறுவன் அறையின் இரும்பு கதவுகளை கடப்பா கல் மூலமாக உடைத்து தப்பித்து மீதமுள்ள அனைத்து அறைகளையும் உடைத்து மற்ற சிறுவர்களையும் தப்பிக்க வைக்க முயற்சி செய்திருப்பதும் தெரியவந்தது.  

தீவிர கண்காணிப்பு:

அதனை தொடர்ந்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து கதவை உடைத்து தப்பி ஓடிய ஆறு சிறுவர்களை போலீசார் அருகில் உள்ள முட்புதரில் தீவிரமாக தேடி வருகின்றனர். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து சிறார்கள் தப்பி சென்றதால் அங்கு முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com