அதிரடி விசாரணையில், 19 பேர் கைது... ஆலந்தூர் குண்டு வீச்சு சம்பவத்தின் தொடர்ச்சி...

சென்னை ஆலந்தூரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 19 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதிரடி விசாரணையில், 19 பேர் கைது... ஆலந்தூர் குண்டு வீச்சு சம்பவத்தின் தொடர்ச்சி...
Published on
Updated on
2 min read

சென்னை ஆலந்தூரில் உள்ள ஆபிரகாம் தெருவில் நேற்று இரவு 8 மணியளவில் 30க்கும் மேற்பட்ட இளைஞர் கும்பல் போதையில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வந்தது. அங்கு சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கியது. 

இதை கண்ட பெண்கள் அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.  பின்னர் அந்த கும்பல் ஆபிரகாம் தெருவை சார்ந்த நவீன்(28) என்பவரை சராமாரியாக தலை, முதுகு, இடுப்பு பகுதியில் வெட்டியது. மேலும் அங்கிருந்த சாமியார் ஒருவரின் சமாதியில் பெட்ரோல் குண்டையும் வீசியுள்ளது. இது பற்றி தகவல் அறிந்ததும் ரோந்து காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த போது ஆயுதங்களை ஏந்தி வந்த கும்பல் சிதறி ஓடினர்.

அந்த கும்பலை போலீசார் பிடிக்க முயன்ற போது அவர்களை நோக்கி பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பி சென்றது. இது தொடர்பாக தகவல் அறிந்ததும் மடிபாக்கம் உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.  

மேலும் சம்பவத்தில் ஈடுப்பட்ட ரவுடிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் ஆதம்பாக்கத்தை சேர்ந்த பிரபல ரவுடியும், காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவருமான நாகூர் மீரான் (32) என்பவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ராபின்சன் மற்றும் அவரது கூட்டாளிகள் என 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நாகூர் மீரானின் கூட்டாளி வீரா,  ராபின்சனின் தங்கை ஜெரினா மற்றும் அவரது காதலன் அனில் ஆகியோரை கிண்டியில் வைத்து கடத்தி சென்று, எனது தலைவனை கொலை செய்த ராபின்சனின் தங்கையை காதலிக்கிறாயா என கேட்டு வேளச்சேரியில் அடித்து இறக்கி சென்று விட்டதும் தெரியவந்தது.

பின்னர் ஜெரினாவும், அனிலும் நாகூர் மீரான் கூட்டாளிகள் கடத்திவிட்டதாக ராபின்சனின் கூட்டாளி சஞ்சய் என்பவரிடம் தெரிவித்ததால்,  சஞ்சய் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் கத்தி, கட்டை போன்ற ஆயுதங்களோடு ஆபிரகாம் தெருவுக்குள் நுழைந்து கண்ணில் பட்ட பொருட்களையும்,  கண்ணில் தென்படுவோரை எல்லாம் வெட்டியுள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்த வன்முறையில் அபுபக்கர் , சஜின், நவீன் ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 ஆட்டோக்கள், 5க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை காரணமாக அப்பகுதியே பெரும் பரப்பரபாக காணப்பட்டது அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இரவு நேரங்களில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த வன்முறை தொடர்பாக ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சஞ்சய், அனில் மற்றும் அவரது கூட்டாளிகள் என மொத்தம் 19 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைப்பெறாமல் இருக்க அம்பேத்கர் நகர் மற்றும் ஆபிரஹாம் தெரு பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com