இரண்டாவது முறையாக கோவில் சிலைகள் உடைப்பு... பெரம்பலூர் அருகே பரபரப்பு...

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் சுடுமண் சிற்ப சிலைகள் இரண்டாவது முறையாக உடைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக கோவில் சிலைகள் உடைப்பு... பெரம்பலூர் அருகே பரபரப்பு...
Published on
Updated on
2 min read

பெரம்பலூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் சுடுமண் சிற்பம் சிலைகள் இரண்டாவது முறையாக மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் சேதப்படுத்தப்பட்ட சிலைகளை பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு அணியின் மாநில துணை தலைவர் அஸ்வத்தாமன் பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த சிலைகள் மோசமான முறையில் உடைக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாங்கள் ஏற்கனவே கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருக்கிறோம்.

இந்த விஷயத்தில் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு வழக்கமாக, இந்துக்களை இரண்டாம் தர குடிமக்கள் போல பாவிப்பதை போல இந்த விஷயத்திலும், இல்லாமல் கோவிலை சேதப்படுத்திய சமூக விரோதிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் காவல்துறையினர் இந்துக்கள் தானே என்று, அஜாக்கிரதையாக இருந்ததன் விளைவு தான் இன்று அதே கோவிலை சமூக விரோதிகள் மீண்டும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். 

கடந்த முறை செல்லியம்மன் சிலையை மட்டும் முழுமையாக சேதப்படுத்தி விட்டு, மற்ற சிலைகளை சிறிய அளவில் சேதப்படுத்திய சமூக விரோதிகள், இந்த முறை பெரும்பாலான சிலைகளை உடைத்து தரைமட்டமாக்கி உள்ளனர்.

காவல்துறையினரிடம் நாங்கள் வலியுறுத்தியது போல, நடந்த சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை. யாரையோ பெயரளவிற்கு ஒருவரை பிடித்து இவர்தான் குற்றவாளி என்றும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கண் துடைப்பு நாடகமாடி விட்டனர். 

உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்திருந்தால், தற்போது 15 அடி உயரமுள்ள பெரியசாமி, பைரவர் போன்ற பல்வேறு சிலைகள் முழுமையாக இன்று தகர்க்கப்பட்டிருக்காது. இதனை ஏன் நாங்கள் இவ்வாறு வலியுறுத்துகிறோம் என்றால் ஆந்திர மாநிலத்தில் 19 மாதங்களில் இதுபோல இந்து கோவில்கள் 128 இடங்களில் சேதப்படுத்தப்பட்டது. அங்கும் மெத்தனமானவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

அதேபோல தமிழகத்திலும் மெத்தனமாகவே இந்த விஷயத்தில் காவல்துறை செயல்படுகிறது. சிறுவாச்சூரில் இந்த இடம், முனிவர்கள், சித்தர்கள் வாழ்ந்த இடம். இங்குள்ள கோயில்கள் அனைத்தும் சக்தி பீடங்களை போல செயல்படுபவை. இந்துக்களின் மனதில் பதியப்பட்டுள்ள நம்பிக்கை தகர்க்கும் வகையில் வேண்டுமென்றே இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு இந்துக்களின் மனதை புண்படுத்தி,

வன்முறையை தூண்டும் வகையில் இந்த சமுக விரோத செயலை செய்துள்ளார்கள். ஆந்திராவில் நடைபெற்றதை போல 178 கோவில்கள் உடைக்கப்படும் வரை ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அமைதி காக்க போகிறதா என்று வினா எழுப்பினார் 

தொடர்ந்து பேசிய அவர், இது இப்போது மட்டுமல்ல, தென்மாவட்டங்களிலும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இதே போல சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. எனவே தொடர்ச்சியாக இந்து கோவில்கள் சேதப்படுத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதை பாஜக ஒருநாளும் அனுமதிக்காது.

எனவே காவல் துறையினர் மீண்டும் மெத்தனம் காட்டாமல் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் இல்லையென்றால் உங்களால் முடியவில்லை என்றால் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைத்து விடுங்கள் என்று தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com