தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பொம்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. டிரைவராக பணியாற்றும் இவருக்கு 21 வயதில் கோகுல் என்ற மகன் உள்ளான். இவர் டிப்ளமோ படித்து விட்டு ஓசூரில் உள்ள தனியார் நிறூவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கின் போது, வீட்டுக்கு வந்த கோகுல் செல்போனில் ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அதற்கு அடிமையான கோகுல் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் வைத்திருந்த நகை, பணத்தை வைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடி அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது நண்பர்களிடமும் பணத்தை வாங்கி ரம்மியில் இழந்துள்ளார். இதனால் கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து கடன் தொல்லை தாங்க முடியாத கோகுல் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் அருந்தி விட்டு வீட்டிலேயே மயங்கி கிடந்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அரை மயக்கத்தில் இருந்த கோகுலிடம் கேட்டபோது, தான் விஷம் குடித்து விட்டதாக கூறி உள்ளார். இதனையடுத்து உடனே கோகுலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கோகுல் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.