திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி பெண் வீட்டாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அபூபக்கர் சித்திக். இவருக்கு, ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனக்கு திருமணம் ஆனதை மறைத்து ரெட்டி தோப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை, கடந்த வாரம் திருமணத்திற்காக பெண் பார்க்க அபூபக்கர் சித்திக் சென்றுள்ளார். ஆனால் அந்த பெண், அபூபக்கரை தனக்கு பிடிக்கவில்லை எனக்கூறி நிராகரித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அபூபக்கர் தான் ஒரு செய்தியாளர், உன்னையும் உன் குடும்பத்தாரையும் பழிவாங்காமல் விடமாட்டேன் எனக்கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து தட்டிக் கேட்ட பெண்ணின் தாயையும் தாக்க முயற்சி செய்துள்ளார்.
அப்பெண்ணையும் கீழே தள்ளி அவரது ஆடைகளை கிழித்து தாக்கியுள்ளார். மேலும், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஆம்பூர் நகர காவல் துறையினர் அபூபக்கர் சித்திக்கை கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அபூபக்கர் சித்திக், வாணியம்பாடி பகுதியில் பான்பராக் விற்பனை செய்யும் கடை ஒன்றில் புகுந்து, தான் ஒரு செய்தியாளர் என கூறி மிரட்டி, பணம் பறித்தது , 2016 ஆம் ஆண்டு ஆம்பூரில் இளம்பெண்ணை காதலிப்பதாக கூறி மிரட்டியது உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யபட்டு, அதன் மீதான விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிட தக்கது.
செய்தியாளர் என்ற போர்வையில் காவல் துறையினரிடம் பழகி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் நபர்களிடம் கட்ட பஞ்சாயத்து செய்து உலாவரும் இது போன்ற போலிகள் மீது மக்கள் தொடர்பு துறை அதிகாரிகளும் காவல் துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க || பழனியில் இந்து அமைப்பினர் போராட்டம்!