திருவாரூர் நகர் பகுதியில், அழகிரி காலனியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவருக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவர் திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் சரம் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 5 வருடங்களாக தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் இவருக்கு அதே நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வரும் முத்துச்செல்வன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தமிழ்ச்செல்வி இதற்கு எத்தனையோ முறை எதிர்ப்பை காட்டியும் மேனேஜர் விடுவதாக தெரியவில்லை. அதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த தமிழ்ச்செல்வி மேலிடத்திற்கு இதை புகாராகவும் எடுத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வேலைக்கு வந்த தமிழ்ச்செல்வி, மடப்புரம் பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்து பதறி போன சக ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோதுதான், தமிழ்ச்செல்வி விஷம் அருந்தி இருப்பது தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது தொடர்பாக தமிழ்செல்வியிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தமிழ்ச்செல்வி என்னுடைய ஒப்பந்த நிறுவனமான சரம் நிறுவனத்தின் மேனேஜர் முத்துச்செல்வன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதை பற்றி பல முறை என்னுடைய உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தேன், அவர்களும் முத்துச்செல்வனை அழைத்து கண்டித்தனர்.
ஆனால் இன்று நான் வேலையில் இருந்தபோது, என்னை முத்துசெல்வன் ஆபீசுக்கு வரவழைத்து தகாத முறையில் நடந்து கொண்டார். அதனால் தான் விரக்தியில் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றேன் என்று கண்ணீருடன் தெரிவித்தார். இதையடுத்து, தமிழ்ச்செல்வி அளித்த புகாரின் பேரில், போலீசார் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.