திருடன் என நினைத்து வடமாநில இளைஞரை தாக்கிய 5 பேர்: பரிதாபமாக உயிரிழந்தார்

மதுபோதையில் திருடனாக நினைத்து இளைஞரை தாக்கிய 5 பேர்: சோகமான முடிவு
திருடன் என நினைத்து வடமாநில இளைஞரை தாக்கிய 5 பேர்: பரிதாபமாக உயிரிழந்தார்
Published on
Updated on
1 min read

கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். ஆம்புலன்ஸ் டிரைவரான இவர், தனது நண்பர்கள் கதிர்வேல், பாலாஜி, முத்து, கரண்ராஜ் ஆகியோர் என 5 பேரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 22-ம் தேதியன்று காவிரி ஆற்றங்கரையில் அமர்ந்து 5 பேரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வடமாநில இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.

நடுரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை தொட்டுப் பார்த்துள்ளார் அந்த வடமாநில இளைஞர். இதனை தூரத்தில் இருந்து கவனித்த 5 பேரும், வந்திருப்பவன் பைக் திருடன் என எண்ணி வேகமாக ஓடிச்சென்று இளைஞரை சரமாரியாக தாக்கினர்.

ஏற்கெனவே மதுபோதையில் இருந்த 5 பேரும், வடமாநில இளைஞரை நிர்வாணப்படுத்தி கையில் கிடைத்தவற்றைக் கொண்டு தாக்கி சித்ரவதை செய்துனர்.

இதில் அந்த வடமாநில இளைஞர் தன்னை விட்டு விடுமாறு கண்ணீர் விட்டு கெஞ்சியபோதும், சிறிதும் மனமிறங்காத இளைஞர்கள் கழுத்தில் ஏறி மிதித்தும், மார்பு வயிறு போன்ற இடங்களில் அடித்து உதைத்தனர்.

இதனால் அந்த வடமாநில இளைஞர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தன் கண் முன்பே வடமாநில இளைஞர் இறந்ததைப் பார்த்து பதறிய 5 பேரும் சம்பவ இடத்தை விட்டு ஆளுக்கொரு பக்கம் தெறித்து ஓடி தலைமறைவாகினர்.

இந்த சம்பவம் குறித்து அந்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வாங்கல் காவல்நிலைய போலீசார் நேரில் சென்று இளைஞரின் உடலை மீட்டனர். பின்னர் இளைஞரை தாக்கிய ஆம்புலன்ஸ் டிரைவர் வினோத், பெயிண்டர் கதிர்வேல் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் தப்பியோடிய முத்து, பாலாஜி, கரண்ராஜை தேடி வருகின்றனர்.

மதுபோதையில் இருந்த இளைஞர்கள், திருடன் என நினைத்து வடமாநில இளைஞரை சித்ரவதை செய்து தாக்கிய வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com