ஜெயலலிதா சிகிச்சை குறித்து சசிகலா கூறியது வடிகட்டிய பொய்...கேள்வி எழுப்பும் ஜெயக்குமார்!

ஜெயலலிதா சிகிச்சை குறித்து சசிகலா கூறியது வடிகட்டிய பொய்...கேள்வி எழுப்பும் ஜெயக்குமார்!
Published on
Updated on
1 min read

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள அவரது சிலை  மற்றும் திருவுருவப் படங்களுக்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

எம்.ஜி.ஆர் நினைவு தினம்; ஈபிஎஸ் தலைமையில் மரியாதை :

சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைதொடர்ந்து மலர் மரியாதை செலுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் உறுதிமொழி ஏற்றனர். இதில் முன்னாள் அமைச்சர்கள், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் மற்றும் கே.பி. முனுசாமி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

தனியாக சென்ற சி.வி.சண்முகம்:

அதில் உட்கட்சி விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மரியாதை நிகழ்ச்சியை புறக்கணித்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், தனியாக வந்து எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

தினகரன், ஒ பிஸ், சசிகலா கிடையாது:

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும் இடங்கள் என்பது கட்சியின் தனிப்பட்ட விருப்பம் எனவும், அதனை யாரும் கட்டாயப்படுத்த முடியாது எனவும், கட்சியிலும் கூட்டணியிலும் , தினகரன், ஒ பிஸ், சசிகலா என யாரையும் சேர்த்து கொள்வதில்லை என திட்டவட்டமாக உள்ளதாகவும் கூறினார்.

திமுக அரசு செய்வது துரோகம்:

தொடர்ந்து பேசிய அவர், பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு சேர்க்காதது கரும்பு விவசாயிகளுக்கு திமுக அரசு செய்யும் பெரும் துரோகம் என்றும், அதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என்றும் ஜெயக்குமார் விமர்சித்தார்.

கேள்வி எழுப்பிய ஜெயக்குமார்:

இதனைத்தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், டிசம்பர் மாதத்தில் ஜெயலலிதாவிற்கு வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க மருத்துவர் தெரிவித்தும் சிகிச்சை அளிக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து சசிகலா கூறியது வடிகட்டிய பொய் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, நேற்று சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சசிகலா,செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதா சிகிச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த சசிகலா வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுப்பதற்கு அம்மா ஜெயலலிதா அவர்களே நான் நன்றாக உள்ளேன் வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும், வெளிநாடுகளிலிருந்தே மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்ததாகவும் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com