மனிதனின் உணர்வோடு இரண்டறக் கலந்த ஒரு விஷயமாகிப்போன எமோஜிக்கள் இனி இல்லை என்றால் என்ன ஆகும்? ...
பொதுவாகவே மக்களின் வேலைகளை எளிமையாக்கவும், வேலைச் சுமையைக் குறைக்கவும்தான் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த காலத்தில் அம்மி, ஆட்டு உரல், தொடங்கி, அடுப்பு வரை காலத்தின் மாற்றத்தால், அவை மிக்ஸி, கிரைண்டர் , கேஸ் ஸ்டவ் என உருவெடுக்க, மிக எளிமையான பயன்பாட்டோடு, இப்படி துரிதமாக பயன்படுத்தும் வகையில் பல தொழில்நுட்ப சாதனங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
அதேபோல, நாம் தூரத்தில் இருக்கும் நம் உறவுகளோடு தகவல்கள் பறிமாறிக்கொள்ள கடித பரிவர்த்தனைகள் செய்த காலமும் சற்றே முன்னேற்றம் கண்டு, மின்னஞ்சல்கள் மூலமாக தங்களது உணர்வுகளை பகிர்ந்துகொள்ளும் நிலையும் உருவாகியது.
பின்னாளில் கைபேசி இல்லாமல் மனிதன் வாழவே முடியாது என்னும் நிலையும் வந்துவிட்டது. இப்போது மின்னஞ்சல்கள் மற்றுமொரு வடிவம் பெற்று குறுஞ்செய்திகளாக உலா வருகின்றன.
குறுஞ்செய்தி என்றாலே ’சிறிய தகவல்’ பரிமாற்றம் தான் என்றாலும், இவற்றையும் சுருக்கி நம் இணைய தலைமுறையினர் எமோஜிகளாக உபயோகிக்கின்றனர்.
இணையத்தில் பலரும் தங்களது எவ்வளவு பெரிய எமோஷன்களையும் ஒரே ’எமோஜி’க்குள் பார்சல் செய்து, பேசுவோருக்கெல்லாம் அனுப்பி விடுகிறார்கள். அவர்களும், அதனை எடுத்து பார்த்து தங்களது எமோஷன்களையும் இன்னொரு எமோஜிக்குள் அடைத்து திருப்பி அனுப்புகிறார்கள்.
இப்படி மனிதனின் உணர்வோடு இரண்டறக் கலந்த ஒரு விஷயமாகிப்போன எமோஜிக்கள் இனி இல்லை என்றால் என்ன ஆகும்? ... நம்மில் பலருக்கு ஸ்டேட்டஸ் போடும் பழக்கம் இல்லாமல் இருக்கலாம் ஆனால், மற்றவர்களின் ஸ்டேட்டஸ்களுக்கு ரிப்ளை செய்யாமல் இருக்கவே முடியாது.
அதுவும் பக்கம் பக்கமாய் பேச ஆர்வம் காட்டமாட்டார்கள். சொல்ல வந்த அத்தனையையுமே ஒரே எமோஜியாக சொல்லி விடுவார்கள்.
இப்படி எமோஜிகளைத் தூதுவர்களாக்கி, அதிலும், இதயத்தையே இடம் மாற்றிக்கொள்வதாக ’ஹார்ட் ஹார்ட்’ -ஆக விட்டுத்தள்ளும் இணைய காதலர்களுக்கும் சரி, ஃபார்வர்ட் மெஸேஜ்களாக இருந்தாலும் அதில் ஒரு அழகு இருக்கவேண்டுமென எண்ணி அதில் ஒன்று இரண்டு ஹார்ட்டுகள் சேர்த்து போட்டு ஷேர் செய்யும் பார்ட்டிகளுக்கும் சரி, அல்லது சிங்கிளாக இருந்தாலும் தங்களை கமிட்டட் போலவே காட்டிக்கொள்ள நினைத்து இல்லாத காதலிக்கு அம்முக்குட்டி, கருவாச்சி, குள்ளச்சி என பெயர் வைத்து அப்படியே ’ஹார்ட்டு’களால் அலங்கரித்து ஸ்டேட்டஸ் போட்டு அள்ளி விடும் கில்லாடிகளுக்கும் சரி, இந்த செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
ஆனாலும் வேறு வழியில்லை; இந்த நிலை தான் இனிமேல்..! அதுவும், ஃபாரீன் மாப்பிள்ளைகள், முறைமாமன்களாக இருந்தால் இன்னும் கஷ்டம்தான். ஏனெனில் சவுதி அரேபிய மற்றும் குவைத் நாடுகளில் பெண்களுக்கு குறிப்பாக சிறுமிகளுக்கு ’ஹார்ட்’ எமோஜி அனுப்பினால் சிறைதண்டனை விதிக்கப்படும் என அந்நாடுகள் அறிவித்திருக்கின்றன.
ஆம்...! குவைத் மற்றும் சவுதி அரேபியா நாட்டு சைபர் சட்டத்தின்படி, பெண்கள் அல்லது சிறுமிகளுக்கு ஹார்ட் எமோஜி அனுப்புவது குற்றமாகக் கருதப்படும் எனவும், இந்த சட்டத்தை மீறுவோருக்கு அதிகபட்சமாக சிறைதண்டனையும் அபராதமும் வழங்கப்படும் என இருநாட்டு அரசும் அறிவித்திருக்கின்றன.
அதன்படி, குவைத்தில் பெண்களுக்கோ, சிறுமிகளுக்கோ வாட்ஸ் ஆப் அல்லது ஏதேனும் சமூக வலைதளங்கள் மூலமாகவோ, ’ஹார்ட் எமோஜி’ அனுப்புவோருக்கு, இரண்டு ஆண்டுகள் வரை சிறைதண்டனையும் அதோடு, 2000 குவைத் தினார்( ரூ. 5,35,584 ) அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், சவுதி அரேபியா நாட்டிலும் இதேபோன்ற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, பெண்களுக்கோ, சிறுமிகளுக்கோ வாட்ஸ் ஆப் அல்லது ஏதேனும் சமூக வலைதளங்கள் மூலமாகவோ, ’ஹார்ட் எமோஜி’ அனுப்புவோருக்கு, இரண்டு அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுமெனவும், மேலும், இந்த குற்றச் செயலுக்கு அபராதமாக 100,000 சவுதி ரியால்கள் வரை ( ரூ. 21,92,588 ) விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இணைய வாசிகளுக்கு, குறிப்பாக இந்த இரு நாடுகளில் இருக்கும் இணைய, இதய வாசிகளுக்கு இது ஒரு ஹார்ட் பிரேக்கிங் செய்திதான்.