கண்ணீரில் தத்தளிக்கிறது கடவுளின் தேசம்.. நிலச்சரிவினால் முற்றிலும் மூழ்கிப்போனது முண்டக்கை கிராம். ஜூலை 30-ம் தேதி அதிகாலை 2 மணி முதல் கேட்ட மரண ஓலம் இன்று வரை ஓய்ந்தபாடில்லை.
500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் நிலச்சரிவால் மூடப்பட்ட நிலையில், இதுவரை கிட்டத்தட்ட 200 பேர் இறந்து போனதாக கூறப்படுகிறது. மேலும் 600-க்கும் மேற்பட்டோரின் கதி என்னவென்றே தெரியவில்லை.
இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் தமிழர்கள் 9 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மற்றும் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இறந்து போனதாக கூறப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூரை அடுத்த கரன்சி ஐயப்பன் காலனையைச் சேர்ந்த கௌசல்யா என்பவர், தன் கணவர் செல்லக்குட்டன் மற்றும் ஒரு வயது மகள் ஆதியா ஆகியோருடன் முண்டக்கை பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் கணவன் - மனைவி மற்றும் அவர்களின் ஒரு வயது மகள் உள்பட அனைவருமே மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.
இதே போல நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த காளிதாஸ், கல்யாணகுமார் ஆகியோர் கட்டட வேலைக்காக சூரல்மலைக்கு சென்றிருந்தனர். இதே போல பந்தலூரைச் சேர்ந்த ஷிஹாப் என்பவர் சூரல்மலையில் உள்ள பள்ளி வாசலில் மத ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் காளிதாஸ், கல்யாணகுமார், ஷிஹாப் உள்ளிட்ட 6 பேர் சூரல்மலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
இதில் முண்டக்கை மற்றும் சூரல்மலை, அட்டமலை பகுதியில் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு மேப்பாடி தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டது.
மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில் மண்ணில் புதைந்தவர்களை தேடுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. வயநாடு, சூரல்மலை ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருவதால் உடல்கள் மண்ணில் மேலும் புதைந்து கொண்டே போவதால் மீட்புப்படையினர் திணறி வருகின்றனர்.