உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது...ஆளுநருக்கு பதிலடி கொடுத்த மதுரை எம்.பி!

உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது...ஆளுநருக்கு பதிலடி கொடுத்த மதுரை எம்.பி!
Published on
Updated on
2 min read

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்தும் ஆளுநர்:

சமீப காலமாகவே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது. இந்துத்துவா ஆதரவு குறித்தும், இந்தி ஆதரவு குறித்தும் அவர் பேசுவது தமிழ்நாடு தலைவர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில், 4 நாட்கள் கழித்து மாநில அரசு என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஒப்புக்கொண்டது ஏன்? என்றும், பயங்கரவாதிகள் முக்கியமான ஆதாரங்களை அழித்துவிட்டதாகவும் ஆளுநர் ரவி பகிரங்கமாக பேசியது மிகப்பெரிய சர்ச்சையானது. 

திரும்ப பெற வலியுறுத்திய அரசு:

தொடர்ந்து, மாநில அரசை எதிர்த்தும், மத்திய அரசை ஆதரித்து பேசுவதாகவும், தமிழ்நாடு அரசின் பல முக்கியமான மசோதாக்கள் மீது எந்த ஒரு முடிவும் எடுக்காமல் கிடப்பிலேயே போட்டு வைத்திருக்கிறார் எனவும் ஆளுநர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன், ஆளுநர் ரப்பர் ஸ்டாம்ப் ஆக செயல்படுவதாக கூறி, தமிழக தலைவர்கள் தமிழ்நாடு ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்று ஒன்றாக கையெழுத்திட்டு குடியரசுத்தலைவரிடம் கடிதம் வழங்கியுள்ளனர்.

உச்சநீதிமன்றம் விமர்சனம்:

இதனிடையே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காதது தொடர்பாக உச்சநீதிமன்றம் மிக கடுமையாக  விமர்சித்திருந்த நிலையில், ஆளுநரை புறக்கணித்துவிட்டு 7 பேரையும் சமீபத்தில் விடுதலை செய்து உத்தரவிட்டது. 

முற்றுகைப் போராட்டம்:

தொடர்ந்து, தனது வேலைகளை சரிவர செய்யாத ஆளுநரை கண்டித்து டிசம்பர் 29 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்,

திராவிட இனம் கிடையாது:

இந்நிலையில் சென்னை ராஜ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி , திராவிடம் என்பது ஒரு இனமே இல்லை.  ஆங்கிலேயர்கள் தான் அதை உருவாக்கினார்கள்.  அதனை ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின்னரும் திராவிட இனம் என்று பின்பற்றி வருவது தவறு என சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.

நீதித்துறை முடிவு செய்யும்:

இதனைத்தொடர்ந்து, லோக் ஆயுக்தா தினத்தையொட்டி கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்ற குரல்கள் ஒலித்து வருகிறது. அந்த குரல்கள் முக்கியமல்ல, நமக்கு இந்திய அரசியலமைப்பு மட்டுமே முக்கியமானது. உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அரசியலமைப்பை வெளிப்படுத்தும் அமைப்புகள் என்பதால் ஆளுநரின் நடவடிக்கைகள் சரியானதா? இல்லையா?என்பதை நீதித்துறை முடிவு செய்யும் என்று விமர்சித்தார்.

ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் கிடையாது:

அதேபோல் ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் கிடையாது என்று கூறிய அவர், அரசியலமைப்பு விதி 200ன் கீழ் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவோ அல்லது மசோதாவைத் தடுத்து நிறுத்தவோ அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக வைத்திருப்பதாகவோ ஆளுநர் அறிவிக்கலாம். அது அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றமே தெளிவுபடுத்தியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசு தரப்பில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

உங்கள் விருப்பம் ஈடேறாது:

இந்நிலையில், ஆளுநர் ரவியின் பேச்சுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தக்க  பதிலடி கொடுத்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் இரு பேச்சுகள் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள வெங்கடேசன், ”ஆளுநர் ரவி அவர்களே, உங்கள் ஆசையெல்லாம் அரசியல் சாசனம் ஆகி விடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை ரப்பர் ஸ்டாம்ப் ஆக்கும் உங்கள் விருப்பம் ஈடேறாது. திராவிடர் ஒரு மரபினம் அல்ல, என்று சொல்லும் போதே நீங்கள் யாருடைய ரப்பர்ஸ்டாம்பை குத்த நினைக்கிறீர்கள் என்பதை தமிழகம் அறியும்” என்று விமர்சித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com