மகாகவி, முண்டாசுக்கவி, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி என பல சிறப்புப்பெயர்களால் வழங்கக்கூடியவர் பாரதியார். இன்று அவருடைய பிறந்தநாள் ஆகும். அவரை பற்றிய தகவல்களை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்....
திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரம் எனும் ஊரில் 1882-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந்தேதி சின்னச்சாமி - இலக்குமி அம்மாளுக்கு மகனாக பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன். இவர் பிறந்த சில ஆண்டுகளிலேயே தாய் இறந்துவிட பாட்டியிடம் வளர்ந்தார். பள்ளி படிப்பை படித்துக்கொண்டு இருக்கும்போதே தனது 11 ஆம் வயதில் கவி புனையும் ஆற்றலை பெற்றிருந்தார். பின்னர் 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை திருமணம் செய்துக்கொண்டார். குழந்தை திருமணம் செய்துக்கொண்டதாலோ என்னவோ அதனை எதிர்த்து, தன் கவிதைகள் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தார்.
பின்னர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் வறுமைக்கு தள்ளப்பட்டார். தொடர்ந்து பொருளுதவி கோரி எட்டயபுர மன்னருக்கு கடிதம் எழுதினார். ஆனால் அவருக்கு எட்டயபுர அரண்மனையிலேயே பணி கிடைத்தது. சில காலத்தில் அதனை விடுத்து காசிக்கு புறப்பட்டு சென்றார். தொடர்ந்து 7 ஆண்டுகளாக பாடல் எழுதாமல் இருந்த அவர்,1904 ஆம் ஆண்டு மதுரையில் எழுதிய பாடல் “விவேக பானு” என்னும் இதழில் வெளியானது.
தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காளம் என பல மொழிகளில் புலமை வாய்ந்தவர் பாரதி. இவ்வளவு, மொழிகளில் வல்லமை பெற்றவராயினும் ” யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்..” என கவி பாடினார்.
இப்படியாக தாய் மொழியாம் தமிழ் மொழி மீது கொண்ட அதீத பற்றால் பாரதி, அவர் கற்றறிந்த மொழிகளில் தனிச்சிறப்புடைய படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்தார். இவர் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த எழுத்தாளராகவும், பத்திரிக்கையாசிரியராகவும் இருந்தார். அதுமட்டுமல்லாமல் தீண்டாமை, பெண்ணுரிமை போன்ற பல சமூக சீர்திருத்தங்களுக்காக போராடியவர். இதனை அவரது கவிதை பாணியில் “ பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்..” என்று பெண்ணுரிமை பற்றியும், “சாதிகள் இல்லையடி பாப்பா...” என தீண்டாமை பற்றியும் கவி பாடியுள்ளார்.
பின்னர் விடுதலை போராட்டத்திலும் இறங்கினார். ” என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? “ என சுதந்திர தாகம் குறித்து கவி எழுதினார். 1905 ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கியவர், வ.உ.சி போன்றோரிடம் நெருங்கிப் பழகினார். தொடர்ந்து 1907 ஆம் ஆண்டில் சென்னையில் “இந்தியா” என்னும் வார ஏட்டையும் “பால பாரதம்” என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். பின்னர் தான் ஆசிரியராக பணியாற்றிய “இந்தியா” பத்திரிக்கையை சுதந்திரத்திற்காக பயன்படுத்தினார். சுதந்திரத்திற்காக அவர் எழுதிய பாடல்கள் போராட்டத்திற்கு பேருதவியாக இருந்தது. இது குறித்து பிரிட்டிஷ் அரசு அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்ததாக பாரதியாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அவர் நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க புதுச்சேரியில் தலைமறைவானார். பின்னர் புதுச்சேரியிலிருந்து தனது, இந்தியா பத்திரிக்கையை வெளியிட்டார். அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்கத் தொடங்கியது. இதனால் கடுப்பான பிரிட்டிஷ் அரசு அந்த பத்திரிக்கையை படிக்க தடை விதித்ததால் அது முடங்கியது.
இந்த காலகட்டத்தில் தான் பாரதி, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற காவியங்களை இயற்றினார். புதுவையில் இருந்து வெளியேறி பிரிட்டிஷ் பகுதியில் காலடி எடுத்து வைத்த உடன், 1918 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் பாரதி. 34 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்து பின்னர் கடையம் என்னும் பகுதியில் குடியேறினார். 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் வறுமை அவரை சூழ்ந்துகண்டது. தொடர்ந்து எட்டயபுர மன்னருக்கு கடிதம் எழுதினார். ஆனால் இந்த முறை அவரிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இந்த வறுமையிலும்கூட, வீட்டில் இருக்கும் சிறிதளவு அரிசி, பருப்பையும் பறவைகளுக்கு உணவாக அளித்து தான் பசியுடன் இருந்த நாட்கள் ஏராளம். இதனை தன் கவியிலும் “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என உணர்த்தி இருப்பார்.
இப்படியாக வறுமையில் வாழ்ந்த அவர், 1919 ஆம் ஆண்டு மீண்டும் சென்னை வந்தார். அப்போது ராஜாஜியின் வீட்டிற்கு ஒரு முறை சென்றபோது அங்கு மகாத்மா காந்தியை சந்தித்தார். அந்த சந்திப்பே முதலும் கடைசியும் ஆகும். திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டவர் பாரதி. அதேபோல் 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வழக்கம் போல் அந்த கோவிலுக்கு சென்றார். எதிர்பாராத விதமாக அந்த கோவில் யானை அவரை தூக்கி வீசியது. இதில் காயமடைந்த அவர், நோய்வாய்ப்பட்டார். இதற்கான மருந்துகளை சாப்பிட மறுத்து வந்தவர் தனது 39 வது வயதில், 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி இவ்வுலகை விட்டு பிரிந்தார். பல புரட்சிகளை செய்த பாரதி மறைந்தாலும் அவரின் கவிதைகள், கட்டுரைகள் காலத்திற்கும் அழியாமல் நிற்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
--சுஜிதா ஜோதி