மனுஸ்மிருதிக்கு எதிராக களமிறங்கிய திருமா...அனல்பறக்கும் அரசியல் களம்..!

மனுஸ்மிருதிக்கு எதிராக களமிறங்கிய திருமா...அனல்பறக்கும் அரசியல் களம்..!
Published on
Updated on
2 min read

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மனுஸ்மிருதி நூலை இலவசமாக வழங்கினார் திருமாவளவன்...

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்த திருமாவளவன்:

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்துவதற்கு அனுமதிகோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றமும் அதற்கு அனுமதியளித்து உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விசிக கட்சி தலைவர் திருமாவளவன், ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்தும் அதே நாளில் மனித நல்லிணக்க பேரணியை நாங்கள் நடத்துவோம் என்று அறிவித்தனர். இதையடுத்து, இரண்டு பேரணிகளும் ஒரே நாளில் நடைபெற்றால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் தமிழக காவல்துறை ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி தரவில்லை. 

பேரணியை ஒத்தி வைத்த ஆர்.எஸ்.எஸ்:

அதன்பின், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளுடன் இன்று தமிழகத்தில் 44 இடங்களில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நீதிமன்றத்தின் நிபந்தனைகளை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதால் இன்று நடைபெறவிருந்த பேரணியை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது. 

இலவசமாக வழங்கப்பட்ட நூல்:

இந்நிலையில், தமிழகத்தில் இந்துதுவத்தை பரப்புவதற்காக பேரணி நடத்த போராடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கையான மனுஸ்மிருதி நூலை தமிழில் மொழிபெயர்த்து  ”மனுஸ்மிருதி: பெண்கள்- சூத்திரர்கள் பற்றி என்ன சொல்கிறது” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டது. அத்துடன் இந்த புத்தகத்தை தமிழ்நாடு முழுவதும் பரவலாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே விசிக கட்சியின் நோக்கமாக இருந்து வந்தது. அதன்படி, இன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு இலவசமாக மனுஸ்மிருதி நூலை விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் வழங்கினார்.

விழிப்புணர்வுக்காக வழங்கப்பட்ட மனுஸ்மிருதி நூல்:

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், மனுஸ்மிருதி என்பது இந்துக்களின் வேத நூலாகவும் வழிகாட்டு நூலாகவும் உள்ளதால், அதன் அடிப்படையில் தான் இந்து சமூகம் இயங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். மனுஸ்மிருதியை பொறுத்தவரை பெண்கள் சூத்திரர்களாக நடத்தப்பட வேண்டும் என்பதே அதன் நோக்கம். அதனடிப்படையில் தான் ஆர்.எஸ்.எஸ் இயங்கி வருகிறது. இதனை மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டவும், இந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் தான் மனுஸ்மிருதி புத்தகத்தை இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

தமிழகம் மதவெறி களமாக மாறிவிடும்:

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தமிழகத்தில் நுழைந்து மதவெறியை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள், இது சமூக நீதிக்காண மண் என்பதை ஆர்எஸ்எஸ் அமைப்பு புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஆர் எஸ் எஸ் ஐ தமிழகத்திற்குள் நுழைய விட்டால் தமிழகம் மதவெறி களமாக மாறிவிடும், எனவே, அது குறித்த  விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டால் இந்தியாவிலேயே ஆர் எஸ் எஸ் க்கு இடம் இருக்காது என்பதால் இந்த நூலை இலவசமாக வழங்குவதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

முன்னதாக, 1927 டிசம்பர் 25 அன்று புரட்சியாளர் அம்பேத்கரால் எரிக்கப்பட்ட நூல் மனுஸ்மிருதி என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com