விவாகரத்து பெற்ற பெண்கள் பலரும் சமுதாயத்தில் மறைந்து வாழ்ந்து வந்த நிலையில் இதற்கு விதிவிலக்காய் பெண் ஒருவர் செய்த காரியம் புரட்சியை விதைத்துள்ளது.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது.. அதற்காக விவாகரத்து என்றால் நரகத்தில் நிச்சயிக்கப்படுகிறதா? என்று விவகாரமான கேள்விகளை எல்லாம் எழுப்பக்கூடாது..
சொர்க்கமாக நினைத்த வாழ்க்கை நரகமாய் போய் விட்டதால் அதிலிருந்து விடுபடுவதற்கு முடிவெடுப்பவர்களே விவாகரத்தை நாடுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் விவாகரத்து பெறும் பெண்களுக்கு விவாகரத்து என்பது அடிமை சாசனத்தை உடைத்தெறிந்து விடுதலையாவது போல..
முன்பெல்லாம் விவாகரத்து செய்த பெண்கள், இதனை வெளியில் சொல்வதற்கே வெட்கப்பட்டு மறைப்பதுண்டு. ஆனால் சமீபகாலமாக இந்த குற்றவுணர்ச்சிகளை எல்லாம் தூக்கி ஓரம்போட்ட பெண்கள் விவாகரத்தைக் கூட கொண்டாட தொடங்கி விட்டனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த லாரன் புரூக் என்ற பெண் கடந்த 2012-ம் ஆண்டு திருமண வாழ்வில் இணைந்தார். ஆனால் கணவன் - மனைவிக்கு இடையே இறந்த சுமூக உறவு கசந்து போனதால் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
கடந்த 2021-ம் ஆண்டு கணவரைப் பிரிந்த லாரன்புரூக் சமீபத்தில் சட்டரீதியாக விவாகரத்து பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து பெரும் மகிழ்ச்சியில் மூழ்கிய லாரன்புரூக் தன் கணவனுடனான புகைப்படங்களை கிழித்தும், காலில் போட்டு மிதித்தும், போதாக்குறைக்கு தீயிட்டு கொளுத்தியும் கொண்டாடினார்.
இந்த விவாகரத்து செலிபிரேஷன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் இளம்பெண் ஒருவர் அதையே பின்பற்றியுள்ளார்.
அதே போல சிவப்பு ஆடையை அணிந்து கொண்டு தன் கணவனுடனான புகைப்படத்தை கிழித்து எறிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருமணத்தை மட்டும் கொண்டாடி வந்த நிலையில் விவாகரத்தையும் அதே போல மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ள முன்வந்திருப்பது சமுதாயத்தில் பெரும் மாற்றத்தையே உண்டாக்கும். குற்றவுணர்ச்சியை நிச்சயம் போக்கும் என்பதும் பலரது கருத்துக்களாகவும் உள்ளது.