ஒரே நாடு ஒரே தேர்தல்...ஈபிஎஸ்க்கு சட்ட ஆணையம் அனுப்பிய கடிதம்...7 நாட்களுக்குள்...புகார் அளித்த ஓபிஎஸ் ஆதரவாளர்!

ஒரே நாடு ஒரே தேர்தல்...ஈபிஎஸ்க்கு சட்ட ஆணையம் அனுப்பிய கடிதம்...7 நாட்களுக்குள்...புகார் அளித்த ஓபிஎஸ் ஆதரவாளர்!
Published on
Updated on
2 min read

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் முறையே தொடர்வதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது என ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்

அதிகாரப்போட்டி:

அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை விவகாரத்தால் இரட்டை துப்பாக்கிகளாக செயல்பட்டு வந்த ஓபிஎஸ் , ஈபிஎஸ் இருவரும் பிரிந்து தற்போது இரண்டு அணிகளாக மோதி வருகின்றனர். அதிமுக யாருக்கு சொந்தம் என்பதில் ஈபிஎஸ்க்கும், ஓபிஎஸ்க்கும் இடையே அதிகாரப்போட்டி நிலவி வருகிறது. 

எடப்பாடிக்கு ஆதரவளிக்கும் மத்திய அரசு:

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ள நிலையிலும், இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ள நிலையிலும், எடப்பாடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலே மத்திய அரசு செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் கருத்து பரவி வருகிறது. ஏனென்றால், ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வலியுறுத்தி அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு தான் மத்திய அரசு கடிதம் அனுப்பியது. ஓபிஎஸ் க்கு கடிதம் அனுப்பவில்லை.

ஈபிஎஸ் சை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம்:

அதேபோல், அதிமுக சார்பில் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான அதிமுக வரவு செலவு கணக்குகள் நவம்பர் 29ஆம் தேதியே அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். இந்த வரவு செலவு கணக்குகளை இந்திய , தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளதோடு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ற அடிப்படையில் தாக்கல் செய்த விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்திலும் பதிவேற்றியது. 

இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு கடிதம்:

இதைத்தொடர்ந்து, ஓபிஎஸ் அணிக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தில் மத்திய சட்ட ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக  அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்கும் வகையில் தேர்தல் ஆணையத்தில் சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அந்தவகையில், அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு வருகிற ஜனவரி மாதத்திற்க்குள் பதில் அளிக்கும் படி கடிதம் அனுப்பியுள்ளது.

புகார் அளித்த ஓபிஎஸ் ஆதரவாளர்:

இதனால் அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளனர். ஒரே நாடு, ஒரே தேர்தல்  விவகாரம் குறித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு மத்திய சட்ட ஆணையம் அனுப்பிய அழைப்பிதழை 7 நாட்களுக்குள் திரும்ப பெற வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்தார். 

அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்:

பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டத்திற்கு மத்திய சட்ட ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளது தவறு என்றும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் இருந்து வரும் நிலையில் அதிமுகவினரிடையே மோதலை ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த கடிதம் உள்ளதாகவும், எனவே, மதிய சட்ட ஆணையம் 7 நாட்களுக்குள் இந்த அழைப்பிதழை திரும்ப பெற்று அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு அனுப்ப வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் 7 நாட்களுக்குள் மத்திய சட்ட ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க  இருப்பதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, ரிமோட் வாக்குப் பதிவு முறை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு அதிமுகவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பிதழில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு தமிழக தலைமை  தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் அனுப்பியுள்ளது, நாங்கள் அளித்த மனுவுக்கு கிடைத்த வெற்றியே என்று கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்,

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com