பஸ் ஸ்டாண்டில் தொடங்கிய திரைப்பயணம்..... ஜெயிலரில் ரஜினியுடன்......

பஸ் ஸ்டாண்டில் தொடங்கிய திரைப்பயணம்..... ஜெயிலரில் ரஜினியுடன்......
Published on
Updated on
2 min read

ஆரண்ய காண்டம், மாயவன், பிகில் ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் நன்மதிப்பை பெற்றவர் ஜாக்கி ஷெராப்.  தற்போது ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் இவர், இந்தி, தெலுங்கு, பெங்காலி, மராத்தி, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, போஜ்புரி, கொங்கனி என இந்தியாவின் ஏராளமான மொழிகளில் உருவான திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஆவார். எந்த கதாபாத்திரமானாலும், அதற்கு தன்னை தகுதி படுத்திக் கொள்ளும் இவர் ஆரம்ப காலம் பல துயரங்களைக் கடந்தே வந்ததாகும். 

1957-ம் ஆண்டு மராட்டிய மாநிலம் மும்பையில் பிறந்த இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ஜெய் கிசன் சிவ். இவரது தந்தை காகுபாய் - தாய் ரீட்டா ஷெராப் ஆகியோர் இணைந்து பங்கு சந்தையில் அதிகளவில் முதலீடு செய்து பின்னர் நஷ்டம் ஏற்பட்டு வீதிக்கே வந்தனர். அப்போது 17 வயதான ஜாக்கி ஷெராப் வீட்டை விட்டு வெளியேறி உள்ளூரில் பயில்வானாக இருந்து வந்தார். 

வெறும் 11-ம் வகுப்பு வரை படித்த ஜாக்கி ஷெராப் மும்பையில் உள்ள தாஜ் ஓட்டலில் பயிற்சியாளராகவும், ஏர் இந்தியா விமானத்தில் பணிபுரியவும் விரும்பினார். ஆனால் அதற்கான தகுதிகள் இல்லாத காரணத்தால் இரண்டு இடங்களிலும் இருந்து நிராகரிக்கப்பட்டார் ஜாக்கி ஷெராப். 

இதைத்தொடர்ந்து ஜஹாங்கீர் கலைக்கூடத்தின் அருகே உள்ள டிரேட் விங்ஸ் என்ற உள்ளூர் நிறுவனத்தில் டிராவல் ஏஜெண்ட்டாக பணியாற்றி வந்தவருக்கு நண்பர் ஒருவரின் மூலமாக ஒரு வாய்ப்பு வந்தது. எதேச்சையாக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஜாக்கி ஷெராப்பை விளம்பர நிறுவன கணக்காளர் ஒருவர் பார்த்து மாடலிங் செய்வதில் ஆர்வமா என கேட்டுள்ளார். 

உடனே அவர் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஜாக்கி ஷெராப்-க்கு மாடலிங் துறையில் கதவுகள் திறந்தது. இதையடுத்து 1982-ம் ஆண்டு இந்தியில் ஸ்வாமி தாதா என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஜாக்கி ஷெராப் இதுவரை 150-க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்து முடித்துள்ளார். 

இவற்றில் 1989-ம் ஆண்டு வெளியான பரிண்டா, 1994-ம் ஆண்டு வெளியான ய லவ் ஸ்டோரி, 1995-ம் ஆண்டு வெளியான ரங்கீலா ஆகிய படங்களுக்காக பிலிம் பேர் விருதை பெற்றுள்ளார். இது தவிர மேலும் 6 திரைப்படங்களுக்கு பிலிம்பேர் விருதுகளுக்கு நாமினேட் செய்யப்பட்ட ஜாக்கி ஷெராப் தமிழ், தெலுங்கு, பெங்காலி போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். 

இந்தியாவின் 13 மொழிகளில் சேர்த்து மொத்தம் 220-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ஜாக்கி ஷெராப் தமிழ் ரசிகர்களுக்கு அந்நியமாகவே தெரிந்தாலும் இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த கலைஞராகவே பார்க்கப்படுகிறார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிப்பாக கூறப்பட்ட நிலையில், இதன் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

ரஜினி திரைப்படம் தமிழ்நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், பாலிவுட்டில் வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கு ஜாக்கி ஷெராப்பின் துணை தேவைப்படும் என்றே படக்குழுவினரும் தீர்மானித்துள்ளனர். வெள்ளித்திரை, சின்னத்திரையிலும் சேர்ந்து கலக்கிக் கொண்டிருக்கும் ஜாக்கி ஷெராப், விரைவில் இந்தியாவின் உயரிய விருதை எட்டிப்பிடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com