குஜராத் மாநிலத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 93 தொகுதிகளில் நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது.
முதற்கட்ட தேர்தல்:
குஜராத் சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 182 இடங்களுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி 89 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 1-ம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. முதற்கட்ட தேர்தல் வாக்குபதிவில், 63 புள்ளி 14 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இரண்டாம் கட்ட தேர்தல்:
இந்நிலையில், மீதம் உள்ள 93 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதில், 69 பெண்கள் உட்பட 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது இம்முறை பெண் வேட்பாளர்கள் அதிகம் பேர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பணி தீவிரம்:
தொடர்ந்து, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. அதன்படி, இன்று அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களை அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: மகா தேரோட்டத்தை தொடர்ந்து...மகா தீபம் எப்போ? ஆவலுடன் பக்தர்கள்!!
முடிவடைந்த தேர்தல் பிரச்சாரம்:
இதனிடையே, நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதையொட்டி, நேற்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
சூடுபிடிக்க போகும் அரசியல் களம்:
குஜராத் மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நிறைவடைந்த பிறகு வரும் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதேபோல், இமாச்சல் பிரதேச தேர்தல் முடிவுகளும் அன்றைய தினம் வெளியாக உள்ளதால் வருகிற 8 ஆம் தேதி அரசியல் களமே சூடுபிடித்து காணப்படும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.