தமிழக அரசை கண்டித்து பாஜக அறிவித்த கடை அடைப்பு போராட்டத்தில் இருந்து பாஜக பின்வாங்கியுள்ளது.
கோவை கார் வெடித்த சம்பவம்:
கோவையில் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிவிபத்து சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வெறும் விபத்தல்ல; தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதல் என்று கூறி பாஜகவினர் குற்றம் சாட்டினர். அதுமட்டுமல்லாமல் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
முழு அடைப்பு போராட்டம்:
அதன்படி, இந்த வழக்கின் தீவிரத்தை அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு பரிந்துரைத்தார். அந்த வகையில், தற்போது கோவை சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. ஆனால், இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள நினைக்கும் பாஜக, தமிழக அரசை கண்டித்து கோவையில் வரும் 31 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
தலைவர்கள் கண்டனம்:
பாஜகவின் இந்த பந்த் அறிவிப்பு என்பது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
வழக்கு தொடர்ந்த தொழிலதிபர்:
இதனிடையே, கோவையில் பாஜக அறிவித்துள்ள பந்துக்கு தடை விதிக்ககோரி கோவையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தேசிய புலனாய்வு முகமை வைசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை பாஜக சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. பந்த் அன்று தங்களது கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை அடைத்து வியாபாரிகள் பந்துக்கு ஆதரவு தருமாறு பாஜக நிர்வாகிகள் அழுத்தம் தருகின்றனர். ஏற்கெனவே தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் மாநில அரசை குற்றம்சாட்டி பந்த் நடத்துவது தேவையற்றது. எனவே வரும் திங்கட்கிழமை பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பந்த்-க்கு தடை விதிக்க வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டிருந்தது.
நீதிமன்றம் உத்தரவு:
இந்நிலையில், இந்த வழக்கானது நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "கோவையில் 31 ஆம் தேதி பந்த் நடத்த பாஜக மாநிலத் தலைமை அழைப்பு விடுக்கவில்லை எனவும், சி.பி.ராதாகிருஷ்ணனின் அறிவிப்பை கட்சித் தலைமை அங்கீகரிக்கவில்லை" என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வரும் 31 ஆம் தேதி கோவையில் பாஜக பந்த் நடத்தினால் காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டனர்.
வானதி சீனிவாசன் ட்வீட்:
முன்னதாக, இரும்புக்கரம் கொண்டு பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்ற கட்சியின் கோரிக்கையை வலியுறுத்தி தான் இந்த பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கோவையில் திட்டமிட்டப்படி திங்கட்கிழமை பந்த் நடைபெறும் என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகியும், எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
பாஜக பின்வாங்கியது ஏன்?
பாஜகவை சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் பந்த் நடைபெறும் என்று சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருக்க கூடிய நிலையில், நீதிமன்றத்தில் இந்த பந்திற்கு அண்ணாமலை அழைப்பு விடுவிக்கவில்லை என்று கூறி பாஜக பின்வாங்கியது ஏன்? என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்களிடையே வட்டமடித்து வருகின்றது.