தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்பநாதனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி கட்சி தலைமை அறிவித்துள்ளது.
தென்காசி மாவட்ட திமுக நிர்வாக வசதிக்காக வடக்கு தெற்கு என பிரிக்கப்பட்டு, வடக்கு மாவட்ட செயலாளராக சங்கரன் கோவில் எம்.எல்.ஏ. ராஜாவும், தெற்கு மாவட்ட செயலாளராக சிவபத்மநாபனும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் இருவரும் இணைந்து செயல்பட்ட நிலையில், பிறகு இரு வேறு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்துள்ளனர்.
முன்னதாக, தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த செல்லதுரை, கட்சி தலைமையால் அதிரடியாக நீக்கப்பட்டதாகவும், அவருக்கு பதிலாக தான் எம்.எல்.ஏ. ராஜா, மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்லத்துரை ஆதரவாளர்கள் சென்னையில் அண்ணா அறிவாலயம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், இந்த விவகாரம் அந்த சமயம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் தகவல் கூறப்படுகிறது.
இப்படி ஏற்கனவே, தென்காசி மாவட்டத்தில் கோஷ்டி பூசல் நிலவி வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே, தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாபனுக்கும், கட்சி தலைமையால் மாற்றப்பட்ட செல்லத்துரையின் ஆதரவாளராக கருதப்படும் தென்காசி மாவட்ட ஊராட்சித் தலைவர் தமிழ்செல்விக்கும் இடையே திமுக உட்கட்சி பூசல் நிலவி வந்துள்ளது. இதற்கு பின்னால் வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ. ராஜா இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, மணிப்பூர் சம்பத்தை கண்டித்து தென்காசி மாவட்ட மகளிரணி சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், இந்த இரண்டு பிரிவினரின் கோஷ்டி மோதலும் பூதாகரமாக வெடித்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் பேச வந்த மாவட்ட ஊராட்சித் தலைவர் தமிழ்செல்வியை, சிவபத்மநாபன் பேசவிடாமல் தடுத்ததால் ஆத்திரமடைந்த தமிழ்செல்வி “மணிப்பூர் வன்கொடுமையை கண்டித்து போராடுகிறோம், அதற்கும் இங்கு நடப்பதற்கும் என்ன வித்தியாசம், எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?” என்று ஓப்பன் மைக்கில் ஆவேசமாக கேள்வியெழுப்பினார். தொடர்ந்து சிவபத்மநாபனின் ஆதரவாளர்கள் தமிழ்செல்வி கையில் இருந்த மைக்கை பிடுங்கிவிட்டு, மேடையில் இருந்து தமிழ்செல்வியை கீழே இறக்கிவிட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் சமீபத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காலையில் எழும்போதே ஒரு கையில் கட்சி, மறு கையில் பிரச்சனை என்று ஆரம்பிப்பதாக கூறிய அவர், கட்சிக்கு அவதூறு பரப்பும் வகையில் செயல்படுவோர் மீது உடனடியாக கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது தென்காசி மாவட்ட உட்கட்சி பூசல் விவகாரத்தில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபனை அதிரடியாக நீக்கம் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராக பணியாற்றிய பொ.சிவபத்மநாதனை, அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக சுரண்டை நகரச் செயலாளர் ஜெயபாலனை தெற்கு மாவட்ட செயலாளராக நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே, திமுகவில் உள்ள இரண்டு மாவட்ட செயலாளர்கள் மீது கட்சி தலைமை அதிரடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனின் அதிரடி நீக்கம் நிகழ்ந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.