மாநகராட்சி பள்ளிக்கு  படையெடுக்கும் மாணவர்கள்..! சேர்க்கையில் அசத்தும் ஆசிரியர்கள்..!

தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகள்
மாநகராட்சி பள்ளிக்கு  படையெடுக்கும் மாணவர்கள்..! சேர்க்கையில் அசத்தும் ஆசிரியர்கள்..!
Published on
Updated on
1 min read

1912ஆம் ஆண்டு அன்றைய சென்னை நகரம் 40 ஆரம்ப பள்ளிகளை மட்டுமே கொண்டு கல்வித் துறையைத் தொடங்கியது. ஆனால் தற்பொழுது அரசின் சீறிய முயற்சியாலும், குழந்தைகளுக்கு கல்வியின் மீதான ஆர்வத்தினாலும் மாநகராட்சிப் பள்ளிகளின் எண்ணிக்கை 281ஆக அதிகரித்துள்ளது. இதில், தொடக்கப் பள்ளிகள் 119, நடுநிலைப் பள்ளிகள் 92, உயர்நிலைப் பள்ளிகள் 38, மேல்நிலை பள்ளிகள் 32 என்ற கணக்கில் செயல்பட்டு வருகிறது.

முதலில் மாநகராட்சிப் பள்ளி என்றாலே ஒருவித வெறுப்புடனும், கலக்கத்துடன் பார்த்து வந்த பெற்றோர்களின் கண்கள் விரியும் அளவிற்கு, தற்போது சுகாதாரமான சூழல், காற்றோட்டமான வகுப்பறைகள், சுத்தமான குடிநீர், கண் கவரும் விழிப்புணர்வு ஓவியங்கள் என தனியார் பள்ளிகளுக்கு நிகரான தரத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமித்ததன் மூலம் மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவர்கள் கல்வி நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்பெல்லாம் ஏழை, எளிய மாணவர்கள் மட்டுமே மாநகராட்சிப் பள்ளியில் பயின்று வந்த சூழலில், தற்போது பள்ளியின் தரம் உயர்வை கண்டு அனைத்து தரப்பின மக்களும் தங்களது குழந்தைகளை இங்கே சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முதல் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் வரை ஏராளமானோர் அரசு பள்ளிகளில் பயின்றவர்களே என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

அதுமட்டுமல்லாமல், அரசு பள்ளிகளில் பயின்று பொறியியல், மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 45 ஆயிரம் கல்வி உதவித்தொகை, கலைக் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 7 ஆயிரம் உதவித்தொகை என பல்வேறு சலுகைகள் வழங்கும் போது, நாம் ஏன் தனியார் பள்ளிகளில் நம்மை அடகு வைக்க வேண்டும் என்ற கேள்வியும் தற்போது பெற்றோர்கள் மனதில் எழுந்துள்ளது. 

கடந்த ஆண்டில் 90 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்த நிலையில், இந்தாண்டு 98 ஆயிரத்து 500 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக மாநகராட்சி கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார். படிக்கும் மாணவர்கள் எங்கிருந்தாலும் ஒழுக்கமான கல்வி முறையே அவர்களை உயர்த்துகிறது என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. ஆனால் தனியார் பள்ளியில் படித்தால்தான் தன் குழந்தை சரியான முறையில் படிக்கும் என நினைக்கும்  பெற்றோர்களுக்கு மாநகராட்சி பள்ளி மூலம் முன்னேறும் மாணவர்கள் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com