தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் கல்வி விருதுகள் வழங்கும் விழா

மாணவர்கள் மத்தியில் விஜய் உரை…
தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் கல்வி விருதுகள் வழங்கும் விழா
Published on
Updated on
2 min read

கோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் விஜய், தற்போது முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ளார். கடந்த பிப்ரவரி 2-ம் தேதியன்று தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியையும் தொடங்கினார். இன்னொரு பக்கம் விஜய்யின் தவெக கட்சியினரும், மக்கள் இயக்க நிர்வாகிகளும் தொடர்ந்து மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு ஜூன் 17-ம் தேதியன்று அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவியருக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆயிரத்து 500 மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், ஊக்கத் தொகை வழங்கியதோடு, மாணவ மாணவிகளின் குடும்பத்தினருடன் தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டார் நடிகர் விஜய்.

கடந்த ஆண்டு 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி நள்ளிரவு 12.30 மணி வரை நீடித்தது. இதில் சுமார் 13 மணி நேரம் மேடையில் நின்ற விஜய்யை மாணவ மாணவிகள், ரசிகர்கள் பலரும் மெய்சிலிர்த்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும், மாணவ மாணவியருக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி இரு கட்டங்களாக நடைபெறும் என கடந்த 10-ம் தேதியன்று அறிவித்திருந்தார்.

அதன்படி ஜூன் 28-ம் தேதியன்று முதற்கட்டமாக 234 தொகுதி வாரியாக பத்து மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க உள்ளார். இதன் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி ஜூலை 3-ம் தேதியன்று நடக்க இருக்கிறது.

இதன் முதற்கட்ட நிகழ்ச்சி, சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கான்வென்ஷன் சென்டரில் நடைபெற உள்ளது. இதில் அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மதுரை, நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருப்பூர், விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டருக்கு 9 மணிக்குள் வந்து அடைகிறார். தொடர்ந்து ஒன்பது மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி மாலை 6:00 மணிக்குள் முடிவடை இருக்கிறது. நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே 10 லிருந்து 15 நிமிடங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உரையாற்ற இருக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் கவனித்து வருகிறார். விழா நடைபெறும் திருவான்மியூர் தனியார் திருமண மண்டபத்தில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட உள்ளனர்

கடந்த ஆண்டு பணம் வாங்காமல் ஓட்டு போடுங்கள், விஜய், காமராஜர், அம்பேத்கர், பெரியார் ஆகியோரை படியுங்கள் என மேடையில் பேசியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவராக முதல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் விஜய், என்ன பேசவுள்ளார்? அவரது குட்டி ஸ்டோரி எது பற்றியதாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் மூழ்கியுள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com