தமிழின் சிறப்பு பலருக்கும் தெரியல்...தமிழ்நாடு ஒரு சிறந்த இடம்...அறிவுரை வழங்கிய ஆளுநர்!
தமிழர்கள் எங்கு சென்றாலும் தமிழ்நாட்டு அடையாளத்துடனும் கலாச்சாரத்துடனும் தான் இருப்பார்கள் என்று ஆளுநர் ஆர் என் ரவி கூறியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் கலந்துரையாடல் :
சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் சிவில் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சியில் உள்ள (பேட்ச் 8, பேட்ச் 9)-ஐ சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 44 பேர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து கலந்துரையாடினர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, உறுதியாகவும், பணிவாகவும் இருந்து சிறப்பான பணியை கொடுங்கள் என்று பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
வருத்தம் அளிக்கிறது :
அப்போது, 30 ஆண்டுகள் வரை ஐ பி எஸ் ஆக இருந்துள்ளீர்கள், பல்வேறு நகரங்களில் பணி புரிந்த அனுபவம் எப்படி இருந்தது என்ற கேள்விக்கு பதிலளித்த ஆளுநர், பதவி ஓய்வு பெற்ற பின் அதிக நேரம் கிடைத்தது. நான் எந்த மாற்றத்தையும் உணரவில்லை. ஆனால், தற்போது தமிழ்நாட்டில் பணியாற்றுவது மூலம் தான் அறியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டதாகவும், தொடர்ந்து தமிழ் மொழியை கற்று வருவதாகவும் கூறினார். தமிழ்நாட்டில் உள்ள பழங்கால கோயில்களில் கட்டிடக் கலை கிரேக்க கட்டடக்கலை கூட தோற்கும் என குறிப்பிட்ட அவர், தமிழின் கலாசாரம், அறிவு எவ்வளவு மகத்தானது என்பதை இது காட்டுகிறது என்றார். நம் நாட்டின் பிற பகுதிகள், தமிழின் சிறப்பை போதுமான அளவு அறியாதது வருத்தம் அளிக்கிறது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
அறிவுரை வழங்கிய ஆளுநர் :
எனவே, நாட்டின் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அங்குள்ள மொழியை கற்றுக்கொள்ளுமாறு பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, நேர்மையான எண்ணங்களுடன் செயல்படுங்கள், மொழியை கற்று கொள்ளுங்கள், உங்கள் பணியை செய்யுங்கள். இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் எவ்வளவு அமைதியாக செயல்படுகிறீர்கள் என்பது முக்கியம். நீங்கள் பணி செய்யும் இடம் சிறியதா , பெரியதா என்பது முக்கியமல்ல தொடர்ந்து பணியாற்றுங்கள், உங்கள் பணியில் நீங்கள் சிறந்தவராக விளங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.