தமிழ் சினிமாவில் பணம் இருந்தால் படம் எடுத்து அதில் நாயகனாகவும் நடித்து பிரபலமாகலாம் உதாரணத்திற்கு நம் லெஜெண்ட் அண்ணாச்சியை போல் ஆனால் பிரபலமானவர்கள் எல்லாம் புகழ் பெற்றவர் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. மீரா மிதுனை அனைவரும் அறிவர் என்பதற்காக அவரை புகழ் பெற்றவர் பட்டியலில் எப்படி வைக்க முடியாதோ அதே போல் தான்.
பணத்தை கூட எளிதில் சம்பாதித்து விடலாம் ஆனால் பேரும் புகழும் சம்பாதிப்பது சாதாரண காரியம் அல்ல அப்படி சம்பாதித்தாலும் அதை நிலைநிறுத்தி வைப்பது என்பது சாத்தியப்படாத ஒன்று. அப்படி தமிழ் சினிமாவில் பெரியளவில் பேரும், புகழும் ஈட்டிய பிரபலங்கள் பிற்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டனர். அப்படி தடம் தெரியாமல் போன தமிழ் நடிகர்களை இந்த பட்டியலில் பாப்போம்.
பிரசாந்த்
70வது 80களில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான தியாகராஜனின் மகன் தான் பிரசாந்த் இவர் லண்டனில் உள்ள டிரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிகில் பட்டம் பெற்றவர். திறமை வாய்ந்த பியானோ பிளேயரான இவர், முதலில் ஒரு மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இருந்தார். ஆனால் தன் தந்தையை பார்த்து அவரை போலவே சினிமாத்துறையில் சாதிக்க எண்ணி நடிகனாக முடிவுசெய்து 1990இல் வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தில் நடித்து தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பின்னர் மலையாளம் கன்னடம் என்று பல தென்னிந்திய படங்களில் நடித்துள்ளார். திரை துறையில் முதல் பத்து வருடத்திலேயே தமிழகத்தின் சாக்லேட் பாயாக வலம்வந்த இவர் விஜய், அஜித் ரேஞ்சுக்கு இருக்கவேண்டியவர். ஆனால் தனது மோசமான திரைப்பட தேர்வு மூலம் இன்று இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டார். அடுத்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவரவுள்ள அந்தத்தூண் படத்தின் தமிழ் ரீமேக் இவருக்கு ஒரு சிறந்த வெற்றியை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்பாஸ்
அடுத்தது அபாஸ் இவரின் தாத்தா பெங்காலி படங்களில் நடித்தவர், ஹிந்தி நடிகர் ஃபெரோஸ் கானுடன் இவர் குடும்பத்திற்கு நெருங்கிய தொடர்பு உண்டு. கல்லூரி நாட்களில் பெங்களூரில் "ஃபேஸ் ஆஃப் 94" FACE OF 94 என்ற போட்டியில் வெற்றி பெற்றதிலிருந்து மாடலிங் பணிகளில் பங்கேற்றார். அதன் பிறகு இயக்குனர் கதிர் தான் எடுக்க போகும் படத்திற்கு புதிய நடிகரைத் தேடுகிறார் என்று கேள்விப்பட்ட அப்பாஸ், நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் ஆடிஷனில் பங்கேற்றார். அதில் தேர்வு பெற்று 1996இல் காதல் தேசம் என்ற படத்தில் அறிமுகமானார். அதன் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆனார். அபாஸ் அப்படி அவர் கமிட் ஆனதால் காதலுக்கு மரியாதையை, ஜீன்ஸ், போன்ற சில முக்கிய படங்களின் வாய்ப்புகளை தவிர்த்துவிட்டார். இதனாலும் அவருக்கு தமிழ் சரளமாக பேச வராது என்பதாலும் இன்ற தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போய் டாய்லெட் விளம்பரங்களில் நடித்து வருகிறார்.
ஜீவன்
நடிகர் சூர்யாவின் பள்ளி தோழனரான ஜீவன் ஹாலிவுட்டில் உள்ள ஸ்டெல்லா அட்லர் ஸ்டுடியோ ஆஃப் ஆக்டிங்கில் நடிப்பதில் 2½ ஆண்டுகள் பயிற்சி பெற்றதுடன் லண்டனில் உள்ள நடிப்பு கல்லூரி ஒன்றில் தியேட்டர் ஆர்ட்ஸில் பிஏ பட்டமும் பெற்றார். இப்படி பல கலைகளை கற்று தமிழ் சினிமாவில் யூனிவர்சிட்டி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் அது படு தோல்வியை தழுவியதால் பெரியதாக பட வாய்ப்பு இன்றி தவித்துவந்தார். அந்த நிலையில் தான் தனது பள்ளி நண்பரான சூர்யாவின் பரிந்துரையின் பெயரில் காக்க காக்க படத்தில் வில்லனாக அறிமுகமானார்.
அந்த கதாபாத்திரம் அவருக்கு பெரிய பெயரை பெற்று தந்ததால் அடுத்தடுத்து வில்லனாக நடிப்பதற்கு இவருக்கு பல வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று கூறி நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தனெக்கென ஒரு முத்திரையை தமிழ் சினிமாவில் பதித்தார். அதன் பிறகு சில தோல்வி படங்களை கொடுத்து வந்தவர் கடைசியாக 2015 அதிபர் என்ற படத்தில் நடித்திருந்தார் பின்பு வந்த வேகத்திலேயே சினிமா துறையை விட்டு சென்றுவிட்டார்.
ஷ்யாம்
12B படத்தில் அறிமுகமாகி இயற்கை என்ற தேசிய விருது வாங்கிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நாயகனாக உயர்ந்தவர் தான் ஷியாம். இவரின் இயற்பெயர் ஷம்ஷுதீன் இப்ராஹிம் ஒரு தொழில்முறை மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், அதையடுத்து நடிகராக அறிமுகமானார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் அதிகமாக நடித்துள்ளார். மேலும் அவர் லேசா லேசா (2003), இயற்கை (2003), மற்றும் உள்ளம் கேட்குமே (2005) போன்ற படங்களில் இவரின் கதாபாத்திரம் இவருக்கு பல பெண் ரசிகைகளை பெற்று தந்தது.
பின்பு கிக் (2009) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததற்காக அவர் பலரின் பாராட்டுகளைப் பெற்றார், அது தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் அவருக்கு கிக் ஷாம் என்ற பெயரைப் பெற்றுத் தந்தது.
அதன் பிறகு சில தெலுங்கு படங்களில் சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு 6 மெழுகுவர்த்திகள் புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்கள் மூலம் தமிழுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.
ஆனால் அந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு போகாததால் இவரின் மார்க்கெட் முற்றிலுமாக முடிந்துவிட்டது. அடுத்து இவர் வெங்கட் பிரபு இயக்கிய பார்ட்டி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் நடித்துள்ளார் அந்த பாத்திரமாவது அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீகாந்த்
ஒரு மாடலாக தனது வாழ்க்கையை துவங்கிய ஸ்ரீகாந்த் கே பாலச்சந்தர் இயக்கத்தில் ஜன்னல் என்னும் நாடகத்தில் நடிப்பதன் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார்.
பெரிதாக சினிமா பின்புலம் இல்லாததால் பல பட வாய்ப்புகள் இவருக்கு கை நழுவி சென்றது. குறிப்பாக காதல் தேசம், காதலர் தினம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் கதிரின் படமான காதல் வைரஸில் ஸ்ரீகாந்த் தான் முதலில் நடிப்பதாக இருந்தது.
ஆனால் பின்பு அஜித்தின் மச்சான் மற்றும் ஷாலினியின் தம்பியான ரிச்சர்ட் ரிஷி அந்த படத்தில் நாயகனாக நடித்தார் அதே போல் ஷியாம் நடிப்பில் வெளிவந்த 12b படமும் ஸ்ரீகாந்த் நடிக்க வேண்டிய படம் தான் இப்படி பல வாய்ப்புகள் போனாலும் தொடர்ந்து முயற்சி செய்து தமிழின் முன்னணி நாயகன் இடத்தை பிடித்தவர். பின்பு அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் காணாமல் போய்விட்டார்.
பரத்
ஷங்கரின் பாய்ஸ் படத்தில் ஐவரில் ஒருவராய் வந்தவர் தான் பரத். நடனத்தில் கைதேர்ந்தவரான இவர் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் அறிமுகமான செல்லமே படத்தில் வில்லனாக நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார்.
பின்பு 2004இல் வெளியான காதல் திரைப்படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அதன் பிறகு காதல் நாயகனாக வலம்வந்த பரத் மாஸ் ஹீரோ ஆகும் முயற்சியில் பேரரசுவுடன் கைகோர்த்து பழனி, திருத்தணி என்று பல பயங்கரமான படங்களை கொடுக்க ஆடியன்ஸ் இவருக்கு பாய் சொல்லி அனுப்பிவைத்து விட்டனர்.
ஆனால் திரும்ப எப்படியாவது விட்டதை பிடித்துவிட வேண்டும் என்று பல வகையில் சிறந்த கதைகளை கேட்டு தேர்வு செய்து நடித்துவந்தாலும் இவரின் விழுந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்துவது மிகவும் கடினமான செயல். ஆனால் வரும் வருடங்களில் இவர் கமிட் ஆகியுள்ள வாணி போஜனுடன் பெயரிடப்படாத திரைப்படம், இன்ஸ்பெக்டர் பரணி, முன்னறிவான், 6 மணிநேரம், சமாரா போன்ற படங்கள் இவருக்கு வெற்றியை பெற்றுத்தரலாம் என்று நம்பப்படுகிறது.
நகுல்
காணாமல் போன கதாநாயகர்களில் அடுத்ததும் ஷங்கர் அறிமுகம் செய்த நாயகர் தான். 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகையாக வலம்வந்த குடும்ப குத்துவிளக்கு தேவையணியின் தம்பியான நகுல் பாய்ஸ் படத்தில் பெருத்த குட்டியாய் இருந்தவர்.
பிறகு உடம்பை குறைத்து சிக்குனு சிறுத்தை குட்டியாய் மாறி காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற வெற்றி படங்களில் நடித்திருந்தார். அதன் பின் நேரம் சரியில்லாத காரணத்தினால் தோல்வி படங்களை கொடுத்து காணாமல் போனவர் சமீபத்தில் தன் மனைவியை திருநங்கை என்று சொல்லியவனுக்கு தக்க பதிலடி கொடுத்து பதிவிடத்தின் மூலம் தான் இருக்கும் இடத்தை தெரிவித்தார்.
விமல்
கூட்டத்தில் ஒருத்தராய் நின்று கொண்டிருந்தவர் ஒரு கூட்டமே கைதட்டும் அளவிற்கு உயர்வது என்பது அவரின் தனிப்பட்ட திறமை உழைப்பை தாண்டி நேரத்தின் செயல்பாடு என்றுதான் கூறவேண்டும், அப்படி பல படங்களில் துணை நடிகராய் இருந்துவந்த விமல் களவாணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
சிவகார்த்திகேயனுக்கு எப்படி வருத்தப்படாத வாலிபர் சங்கமோ அதைபோல் தான் விமலுக்கு இந்த படம். இந்த படத்தின் அதீத வெற்றிக்கு பிறகு இவருக்கு பல படவாய்ப்புகள் வந்து குவிய தொடங்கியது.
பொதுவாக கிராமத்து இளைஞனாக simpleஆகா நடித்து சிரிப்பு காட்டிக்கொண்டு இருந்தவர் நகர்ப்புற இளைஞனாக seriousஆகா நடிக்கும் போதும் சிறப்பு காட்டிவிட்டார். இதனால் இவரின் பட வாய்ப்புகள் குறைய தொடங்கி மார்க்கெட் சுத்தமாக விழுந்துவிட்டது. இருந்தாலும் சண்டைக்காரி, குலசாமி, எங்க பாட்டன் சொத்து என்று இன்னும் பல கிராமத்து படங்களை கைவசம் வைத்துக்கொண்டு நானும் ரவுடி தான் என்பது போல மாஸாக தமிழ் சினிமா துறையில் வலம்வந்து கொண்டிருக்கிறார்.
மோகன்
தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று அழைக்கப்படும் 80களில் முன்னனி நாயகராக வலம் வந்தவர் மோகன் மேடை நாடகத்தில் நடித்து வந்த இவர், பாலு மகேந்திரா இயக்கத்தில் 1977இல் கன்னட மொழியில் வெளிவந்த கோகிலா திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்ததன் மூலம் திரைத்துறையில் நுழைந்தார்.
பின்பு 1980ல் வெளிவந்த மூடு பணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரானார் அவர் நடித்த அத்தனை படங்களும் 100 நாட்கள் ஓடியதால் 1980களில் 'தமிழ் திரையுலகின் வெள்ளி விழா நாயகன்' என்று அழைக்கப்பட்டார். ரஜினியை கமலை இளையவரான இவர் தான் அந்த காலத்தின் சாக்லட் பாயாக இருந்து வந்தார் இப்போதும் இளமையோடு கதாநாயகனாக நடிக்க தகுதியுடையவர் ஆள் அடையாளம் தெரியாமல் போய்விட்டார்.
ராமராஜன்
தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு இணையான புகழை வைத்திருந்த நடிகர் என்றால் அது ராமராஜன் தான் இதுவரை பல நூறு நாட்கள் மேலான படங்களை கொடுத்துள்ள இவருக்கென்ற தென் மாவட்டங்களில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. 80களில் கொடிகட்டி பரந்த இவர் படத்தில் இருந்து தனது கவனத்தை திருப்பி அரசியலில் செலுத்த ஆரம்பித்தார் அதனால் இவரின் காதல் திருமண வாழ்விலும் விரிசல் விழுந்தது. தமிழில் முதல் முறை ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகராக இருந்தவர் அரசியலிலும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் திகழ்ந்தார் ஆனால் இவரை திரைப்படங்களில் பார்க்கவேண்டும் என்ற ரசிகர்களின் ஆசையில் மண் விழுந்துவிட்டது.
இப்படி தமிழ் சினிமாவில் இன்னும் அதிகமான நபர்கள் தடம் தெரியாமல் போயுள்ளனர். அப்படி நீங்கள் பெரிதும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு காணாமல் போன நடிகர்கள் யார்? மீண்டும் தமிழ் சினிமாவில் comeback கொடுக்க வேண்டும் என்று நீங்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் நடிகர்கள் யார் யார் என்பதை கமெண்டில் தெரிவியுங்கள் .