பில்கிஸ் வழக்கு: வழக்கறிஞரான குற்றவாளி...பார் கவுன்சில் விளக்கமளிக்க உத்தரவு!!

பில்கிஸ் வழக்கு: வழக்கறிஞரான குற்றவாளி...பார் கவுன்சில் விளக்கமளிக்க உத்தரவு!!
Published on
Updated on
2 min read

பில்கிஸ் பனோ வழக்கின் குற்றவாளி வழக்கறிஞராக பயிற்சி பெறுவதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் அங்கு மிகப் பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 700க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும் 250க்கும் மேற்பட்ட இந்துக்களும் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாகக் கூறப்பட்டது.

இந்த கலவரத்தில் நெஞ்சை உலுக்கும் வகையில் பல மோசமான சம்பவங்கள் அரங்கேறின. அப்படித்தான் கடந்த 2002இல் மார்ச் 3ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானு என்பவரையும் அவரது குடும்பத்தினரையும் ஒரு கும்பல் தாக்கியது. அப்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கொடூரமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த அந்த கும்பல், அவர்களின் குடும்பத்தினையும் அடித்தே கொன்றது.

இது மட்டுமின்றி பில்கிஸின் இரண்டரை வயதுக் குழந்தையைப் பாறையில் மோத வைத்து கொலை செய்தனர். இதில் பில்கிஸ் பானு உடன் டிரக்கில் பயணித்த 14 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, கடந்த 2004ஆம் ஆண்டு குற்றவாளிகளைக் கைது செய்தது. வழக்கை விசாரித்த மும்பை செசன்ஸ் கோர்ட், கடந்த 2008இல் குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது.

ஆயுள் தண்டனையை எதிர்த்து, குற்றவாளிகள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், அதிலும் அவர்கள் அவர்களுக்கான தண்டனை உறுதியானது. விசாரணைக் காலத்தையும் சேர்த்து 15 ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருந்தனர். இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவர் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

இது தொடர்பாக முடிவெடுக்க பஞ்சமஹால் கலெக்டர் சுஜல் மயாத்ரா தலைமையில் குஜராத் அரசு குழு அமைத்து. இந்த குழு 11 குற்றவாளிகளையும் விடுவிக்கலாம் என்று குஜராத் அரசுக்குப் பரிந்துரை அளித்தது. அதன்படி அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பில்கிஸ் குடும்பத்தினர் 15 பேரை கொன்று அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 11 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது குஜராத் தரப்பு வழக்கறிஞர், நன்னடைத்தையுடன் 11 பேரும் செயல்படுவதாகவும் அதில் ஒருவர் எந்தப் புகாருமின்றி வாகனவிபத்து தீர்ப்பாய வழக்கறிஞராக பணிபுரிவதாகவும் கூறியுள்ளார். 

இதனை எதிர்த்த நீதிபதிகள் சட்டம் ஒரு உன்னதமான தொழிலாக இருக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக பார் கவுன்சில் விளக்கமளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com