"நாளைய தலைவர்களை தேர்ந்தெடுப்பது மாணவர்களே... மாணவர்களிடம் சூசகமாக பேசிய விஜய்...!”

"நாளைய தலைவர்களை தேர்ந்தெடுப்பது மாணவர்களே... மாணவர்களிடம் சூசகமாக பேசிய விஜய்...!”
Published on
Updated on
2 min read

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு, விருந்துடன், பரிசுகளையும் வழங்கி கவுரவித்தார் நடிகர் விஜய்...

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில், கல்வி விருது வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள 234 தொதிகளிலும், முதல் 3  இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் பெற்றோருடன் சென்னை வரவழைக்கப்பட்டனர். சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் திருமண மண்டத்தில் இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாணவ, மாணவியர் அவர்களின் பெற்றோருடன் நடிகர் விஜய் வீட்டிற்கு சென்றனர். சுமார் 6 ஆயிரம் மாணவ, மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட்டன. 150க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்களைக் கொண்டு, இனிப்பு வகைகள், வடை, அடை, பிரதமன் பாயாசம் மற்றும் எண்ணெய்க் கத்தரிக்காய் குழம்புடன் கூடிய 15 வகையான சைவ உணவு தயார் செய்யப்பட்டது. அமாவாசை மற்றும் சனிக்கிழமை என்பதால், சைவ உணவு பரிமாறப்பட்டதாக மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.  

மாணவ, மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு, அனைவரும் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கத்தில் அமர வைக்கப்பட்டனர். சென்னை நீலாங்கரையில் இருந்து புறப்பட்ட நடிகர் விஜய்-க்கு வழிநெடுகிலும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இருசக்கர வாகனத்தில் சூழ்ந்த படி, விழா அரங்கத்திற்கு விஜய்-யை அழைத்து சென்றனர் ரசிகர்கள். பாதுகாப்புடன் விழாவிற்கு வந்த விஜய், திடீரென மாணவிகள் மத்தியில் அமர்ந்து கொண்டு, புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். இதனை எதிர்பாராத மாணவியர்,  மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர்.

பின்னர் மேடை ஏறிய அவர், மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். "எனது நெஞ்சில் குடியிருக்கும்" என்று ஆரம்பித்தவுடன் மகிழ்ச்சி ஆரவாரம் விண்ணைத் தொட்டன. தொடர்ந்து பேசிய அவர்,  அசுரன் படத்தில் தனுஷின் வசனத்தை மேற்கோள் காட்டி படிப்பின் அவசித்தை வலியுறுத்தினார். காசு வாங்கிக்கொண்டு ஓட்டுபோட வேண்டாம் என்றும், நம் விரலை வைத்து நம் கண்களையே குத்துகிறார்கள் என அரசியல் சூழலை சுட்டிக்காட்டிய விஜய், நாளைய தலைவர்களை தேர்ந்தெடுக்கப் போவது நீங்கள் தான் என சூசகமாக கூறினார். கல்லூரி சென்று டிகிரி வாங்குவது மட்டும் முழுமையான  கல்வி அல்ல என்றும், படிப்பைத் தவிர்த்து பார்த்தால் குணம், சிந்தனை, திறன் மட்டுமே மாணவர்களுக்கு எஞ்சியிருக்கும் என்று எதார்த்தத்தை எளிமையாக கூறினார். 

பின்னர் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில், 600க்கு 600 மதிப்பெண் பெற்று, முதலிடம் பிடித்த மாணவி நந்தினிக்கு பொன்னாடை அணிவித்து, வைர நெக்லசை பரிசாக வழங்கினார். அத்துடன் முதல் 3 இடங்களைப் பிடித்த அனைத்து, மாணவ, மாணவியருக்கும் பரிசு பொருட்கள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கி கவுரவித்தார். இதில் மாற்றுத் திறளாளி மாணவர் ஒருவர் தான் வரைந்த ஓவியத்தை, நடிகர் விஜய்க்கு பரிசளித்தார். ஓவியத்தை ரசித்த விஜய், மாணவனைக் கட்டி அணைத்து பாராட்டு தெரிவித்தார். இதனால் , மாணவியர் மட்டுமின்றி பெற்றோரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். 

விஜய்-யின் இந்த செயல் அரசியல் தளத்திற்கான முதற்படி என்று பலரும் கூறிவரும் நிலையில், 2024-ம் ஆண்டு தேர்தலின்போது நடிகர் விஜய் வழிகாட்டுதல்படி செயல்படுவோம் என்று, விஜய் ரசிகர்கள் தெரிவித்தனர். எது எப்படியோ, 2024-ம் ஆண்டு தேர்தல் இப்போதிலிருந்தே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com