காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் சசி தரூரின் ஆதரவாளர்கள் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரஸின் தேர்தல் பொறுப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் முடிவடைந்த நிலையில் உத்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக சசி தரூர் ஆதரவாளர் சல்மான் ஜோஸ் காங்கிரஸின் தேர்தல் பொறுப்பாளரான மதுசூதன் மிஸ்திரிக்கு கடிதம் எழுதினார்.
அக்கடிதத்தில் தேர்தலில் குழப்பமான சூழல் நிலவியதாகவும் தேர்தல் உண்மைத்தன்மையுடன் இல்லை எனவும் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் எழுதப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக “உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டோம். நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்த நிலையில் ஊடகங்களுக்கு ஏன் சென்றீர்கள்” எனக் கேள்வியெழுப்பியுள்ளார் மிஸ்திரி.
மேலும் “முழுத் தேர்தலும் நியாயமற்றது எனக் கூறுவதன் மூலம் ஒரு சிறிய மடுவிலிருந்து மலையை உருவாக்க முயல்வதைப் போல உள்ளது.” எனவும் பதிலளித்துள்ளார்.
கடிதம் ரகசியமாகவே அளிக்கப்பட்டது எனவும் அது எவ்வாறு ஊடகங்களுக்கு கசிந்தது என்பது தெரியவில்லை எனவும் சசி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக ”நம்முன் ஒரு முகம், ஊடங்களுக்கு முன் ஒரு முகம்” என காங்கிரஸ் தலைவர்கள் அவரைக் கண்டித்துள்ளது.
கார்கேவின் வெற்றியை சிலர் சந்தேகிப்பதாகவே தெரிகிறது. ஏனெனில் அவர் காந்தி குடும்பத்தின் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்டார். ஆனால் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடந்தது என்று காங்கிரஸ் இதை மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-நப்பசலையார்