ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்றதும் அவரது முதல் உரையை நிகழ்த்தியுள்ளார். பொருளாதாரத்தை சரிசெய்வதாகவும், அரசாங்கத்தை நேர்மையுடன் வழிநடத்துவதாகவும், கன்சர்வேடிவ் கட்சியின் 2019 அறிக்கையின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சுனக்கின் முதல் உரையின் சிறப்பம்சங்கள் கீழே:
"நமது நாடு ஒரு ஆழமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. கோவிட்-ன் பின்விளைவு இன்னும் நம் நாட்டில் நீடித்து கொண்டிருக்கிறது. உக்ரைனில் புதினின் போர் உலகம் முழுவதும் விநியோக சந்தைகளை சீர்குலைத்துள்ளது." எனப் பேசியுள்ளார்.
மேலும் "பொருளாதார நிலைத்தன்மை மற்றும் நம்பிக்கையை அரசாங்கத்தின் செயல்திட்டத்தின் மூலம் மக்கள் மனதில் ஏற்படுத்துவேன். இது நிச்சயம் நேர்மறையான முடிவுகளை கொண்டுவரும்." எனக் கூறியுள்ளார்.
"எனக்கு முன் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ்ஸுக்கு நான் ஆறுதல் கூற விரும்புகிறேன். அவர் இந்த நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த விரும்பியதில் தவறில்லை. அது ஒரு உன்னதமான நோக்கம். மாற்றத்தை உருவாக்குவதற்கான அவரது திட்டங்களை நான் பாராட்டினேன்.” என்று கூறியுள்ளார்.
மேலும் "ஆனால் சில தவறுகள் செய்யப்பட்டன. தவறான எண்ணங்களினால் தவறுகள் செய்யப்படவில்லை. தவறுகள் இருந்தாலும், அவற்றை சரிசெய்வதற்காகவே எனது கட்சியின் தலைவராகவும், உங்கள் பிரதமராகவும் நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
"பிரதமராக போரிஸ் ஜான்சனின் நம்பமுடியாத சாதனைகளுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். மேலும் அவரது அரவணைப்பு மற்றும் தாராள மனப்பான்மையை நான் பொக்கிஷமாக கருதுகிறேன். மேலும் 2019 இல் எனது கட்சி சம்பாதித்த ஆணை எந்த ஒரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல என்பதை அவர் ஒப்புக்கொள்வார் என்று எனக்குத் தெரியும். இது நம் அனைவருக்கும் சொந்தமான நம்மை ஒன்றிணைக்கும் ஆணையாகும். மேலும் அந்த ஆணையின் இதயம் எங்கள் அறிக்கையாகும். அதன் வாக்குறுதியை நான் நிறைவேற்றுவேன்.” என்று உறுதிப்பட கூறியுள்ளார் ரிஷி சுனக்.
"விஷயங்கள் எவ்வளவு கடினமானவை என்பதை நான் முழுமையாக அறிவேன். அதோடு, நம்பிக்கையை மீட்டெடுக்கும் கடமை என்னுடையது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நான் தைரியமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் ஏற்றுக்கொண்ட உயர் பதவியின் பொறுப்பை நான் அறிவேன். அதன் கோரிக்கைகளுக்கு ஏற்ப செயல்படுவேன் என நம்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார் சுனக்.
"நான் வழிநடத்தும் அரசாங்கம் அடுத்த தலைமுறையை நிச்சயமாக கடனில் விடாது." என்றும் மக்களிடம் கூறியுள்ளார்.
"நான் நம் நாட்டை வார்த்தைகளால் அல்ல, செயலால் ஒன்றிணைப்பேன். உங்களுக்காக நான் நாள்தோறும் உழைப்பேன். இந்த அரசாங்கம் ஒவ்வொரு மட்டத்திலும் நேர்மை, தொழில்முறை மற்றும் பொறுப்புணர்வைக் கொண்டிருக்கும். நான் உங்களிடம் நம்பிக்கையை சம்பாதிப்பேன் ." என்று இங்கிலாந்து மக்களிடையே உறுதிப்பட கூறியுள்ளார் ரிஷி சுனக்.