விவாதப் பொருளாக மாறிய ரிஷி சுனக்..!!! பாஜகவும் எதிர்க்கட்சியும் நேருக்கு நேர் மோதல்!!

விவாதப் பொருளாக மாறிய ரிஷி சுனக்..!!! பாஜகவும் எதிர்க்கட்சியும் நேருக்கு நேர் மோதல்!!
Published on
Updated on
2 min read

இங்கிலாந்தின் புதிய பிரதமராக ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றுள்ளார்.  இந்தியாவின் சிறப்புப் பண்டிகையான தீபாவளி தினத்தன்று, இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி, பிரதமர் பதவிக்கு ரிஷி சுனக்கின் பெயரை பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் மூலமாக ரிஷி சுனக் இந்தியாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளார்.

விமர்சனங்கள்:

ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்றது முதல் இந்தியாவின் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் அவரை முன்னுதாரணமாக காட்டி பாஜகவை விமர்சித்தும் கேள்வியெழுப்பியும் வருகின்றனர். 

விமர்சனம்1:

சிறுபான்மை சமூகத்தில் இருந்து ஒருவரை இங்கிலாந்து அரசாங்கம் தலைவராகத் தேர்ந்தெடுப்பதிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர்களும், இந்தியாவும்  பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர் எதிர்க்கட்சி தலைவர்கள்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் ஆனதையும், டாக்டர் மன்மோகன் சிங் பிரதமரானதையும் சுட்டிக்காட்டியுள்ளது பாஜக.

விமர்சனம்2:

சோனியா காந்தி பிரதமர் வேட்பாளராவதை எதிர்த்தது ஏன் என்பது தொடர்பாக ரிஷி சுனக்குடன் ஒப்பிட்டு ஒரு ட்விட்டர் பயனாளரிடமிருந்து கேள்வியெழுப்பப்பட்டது.

ட்விட்டர் பயனாளிக்கு பதிலளித்த பாஜக தலைவர் விஜய் சவுத்வாலே, "இத்தாலியில் பிறந்த சோனியா (ராஜீவ் திருமணத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாகியும் இந்திய குடியுரிமையை மறுத்தவர்) மற்றும் இங்கிலாந்தில் பிறந்த ரிஷி ஆகியோரை ஒப்பிட முடியாது.  

2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது சோனியா காந்தியின் பெயர் பிரதமர் பதவிக்கு முன் வைக்கப்பட்டது. அப்போது பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும், சோனியா காந்தியே பிரதமர் பதவியிலிருந்து  விலகி இருக்க முடிவு செய்தார். 

விமர்சனம்3:

ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனக் இங்கிலாந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது பெருமைக்குரிய தருணம் என்றும், ஆனால் இங்கிலாந்து சிறுபான்மையினரான ஒருவரை ஏற்றுக்கொண்டதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.  மேலும் நாம் இன்னும் NRC மற்றும் CAA போன்ற பிளவுபடுத்தும் மற்றும் பாரபட்சமான சட்டங்களுக்கு கட்டுப்பட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான ரவிசங்கர் பிரசாத், மெகபூபா முப்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிறுபான்மையினரை ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக ஏற்றுக் கொள்வாரா முப்தி என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவர் அப்துல் கலாம் மற்றும் டாக்டர் மன்மோகன் சிங் ஆகியோரின் தலைமைத்துவத்தை நினைவு கூர்ந்தததோடு தற்போது பழங்குடியினத்தவரான த்ரௌபதி முர்மு எங்கள் குடியரசு தலைவராவார் எனவும் தெரிவித்துள்ளார்.

பொதுவான விமர்சனங்கள்:

காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம் மற்றும் சசி தரூர் ஆகியோரும் பிரிட்டனின் இந்த நடவடிக்கையை வரவேற்று, இந்தியாவிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். 

காங்கிரஸ் எம்பி தரூர் கூறுகையில்,” உலகில் மிகவும் அரிதான காரியத்தை இங்கிலாந்து செய்துள்ளது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். மிக சக்திவாய்ந்த அலுவலகத்தில் சிறுபான்மையினத்தவரை அமர்த்தியுள்ளனர். இந்திய வம்சாவளியான சுனக் பிரதமரானதைக் கொண்டாடுகிறோம். இங்கே இதுபோன்ற செயல் நடக்குமா என்பதைக் நேர்மையாகக் கேளுங்கள்.  இந்தியா மிகவும் சகிப்புத்தன்மையுடனும், அனைத்து மதங்களையும், அனைத்து வகுப்பினரையும் ஏற்றுக்கொள்வதாகவும் இருக்க வேண்டும்.” என்றும் பேசியுள்ளார்.

இந்திய வம்சாவளியான சுனக் இங்கிலாந்தின் பிரதமரானதற்கு அனைவரும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று பாஜக தலைவர் கூறியுள்ளார். ஆனால், சில இந்தியத் தலைவர்கள் துரதிஷ்டவசமாக இந்தச் சந்தர்ப்பத்தை அரசியல் பிரச்சினையாக்க முயல்வதுதான் வருத்தமான விஷயம் என்று பாஜகவின் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் அமித் மாளவியா கூறியுள்ளார்.

மேலும், ”வேறு எந்த நாட்டின் பன்முகத்தன்மையையும் இந்தியா கற்றுக்கொள்ள தேவையில்லை.  இந்தியாவில் 3 முஸ்லிம்கள் மற்றும் ஒரு சீக்கியகுடியரசு தலைவரைத் தவிர, ஒரு சீக்கியர் பத்து ஆண்டுகள் பிரதமராக இருந்துள்ளார்.  சிறுபான்மையினர் உயர் நீதித்துறை பதவிகளிலும் ஆயுதப்படைகளிலும் உள்ளனர்.  இந்தியா வேறு எந்த நாட்டின் பன்முகத்தன்மையிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை.  இதைப்பற்றி பேசும் மெகபூபா ஜம்மு காஷ்மீருக்கு ஒரு இந்து முதலமைச்சரை ஆதரிக்க வேண்டும்.” எனவும் கேட்டுள்ளார் மாளவியா. 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com