குடியரசு தினவிழா அணிவகுப்பானது நடைபெறவுள்ள கடமைப் பாதையானது இதற்கு முன்பு ராஜ்பாத் என்று அழைக்கப்பட்டது. ஆனால் மோடி தலைமையிலான அரசாங்கம் அதன் பெயரை கடமை பாதை என்று மாற்றியது. அத்தகைய சூழ்நிலையில், குடியரசு தினத்தைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை நாம் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
அரசியலமைப்பு நடைமுறை:
இந்திய அரசியலமைப்பு சட்டமானது 26 ஜனவரி 1950 அன்று நடைமுறைக்கு வந்தது. இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றியதும் வீரர்களின் அணிவகுப்பு தொடங்கும்.
முதல் அணிவகுப்பு:
நம் நாட்டின் முதல் குடியரசு தின விழா 1950 ஜனவரி 26 அன்று இர்வின் ஸ்டேடியத்தில் கொண்டாடப்பட்டது. இது இன்று தேசிய மைதானம் என்று அழைக்கப்படுகிறது. முதல் குடியரசு அணிவகுப்பின் போது மைதானத்தில் எல்லைச் சுவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பங்கேற்றவர்கள்:
முதல் குடியரசு தின அணிவகுப்பைக் காண சுமார் 15,000 பேர் மைதானத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. முப்படையினரும் அணிவகுப்பில் கலந்து கொண்டதோடு, ஏழு ராணுவ இசைக்குழுக்களும் குடியரசு தின விழாவில் பங்கேற்றன. இந்த வழக்கம் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பல்வேறு இடங்களில்..:
1954-ம் ஆண்டு வரை இந்திய குடியரசு தின விழா நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது. இர்வின் ஸ்டேடியம், கிங்ஸ்வே (ராஜ்பாத்), செங்கோட்டை மற்றும் ராம்லீலா மைதானத்திலும் குடியரசு தின விழா நடத்தப்பட்டுள்ளது.
1955 முதல்:
இருப்பினும், 1955 ஆம் ஆண்டு முதல் குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு ராஜ்பாத் (கடமைப்பாதை) தேர்ந்தெடுக்கப்பட்டது. அன்று முதல் இங்கு ஆண்டுதோறும் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அணிவகுப்பு பாதை:
அணிவகுப்பானது ரைசினா மலையிலிருந்து தொடங்கி ராஜ்பாத், இந்தியா கேட் வழியாக செங்கோட்டைக்குச் செல்கிறது.
சிறப்பு விருந்தினர்:
சிறப்பு விருந்தினரை அழைக்கும் வழக்கம் முதல் குடியரசு தினத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது.
இந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது. குடியரசு தினத்தன்று மற்ற நாடுகளின் பிரதமர்கள் அல்லது அதிபர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுகின்றனர்.
முதல் சிறப்பு விருந்தினர்:
முதல் குடியரசு தின விழாவிற்கு இந்தோனேசியா அதிபர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
துப்பாக்கிகள் வணக்கம்:
குடியரசு தின விழாவில் தேசிய கீதத்தின் போது 21 துப்பாக்கிகள் ஒரே நேரத்தில் வெடிக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்படுகிறது. இந்த வணக்கம் தேசிய கீதம் தொடங்கி 52 வினாடிகள் வரை நீடிக்கும்.
-நப்பசலையார்