இந்திய இரயில்வேயும், விபத்துகளும்!

இந்திய இரயில்வேயும், விபத்துகளும்!
Published on
Updated on
4 min read

ஒடிசாவில் ஒரே நேரத்தில் 3 இரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 288 பேர் இறந்துள்ளதாகவும் 900பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது. கொடூரமான இந்த ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பாரக்கப்படுகிறது.

நேற்று மாலை சென்னையில் இருந்து ஹவுராவிற்கு சென்று கொண்டிருந்த கொரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவின் பாலசோருக்கு அருகில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதி தடம் புரண்டது. சிறிது நேரத்திற்கு பின்னர் பக்கத்து தண்டவாளத்தில் யஷ்வந்த்பூரிலிருந்து ஹவுரா நோக்கி சென்ற இரயில் இதில் மோதியதில் அந்த ரயிலும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஒரே நேரத்தில் 3 இரயில்கள் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கெடுவாய்யப்பாக சில நேரங்களில் சிக்னல் கோளாரினால் இரண்டு இரயில்கள் மோதி விபத்துகள் ஏற்படுவதுண்டு. ஆனால் இரயில்வே துறையின் வரலாற்றில் 3 இரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது இதுவே முதல் முறையாகும். இது இன்றைய இரயில்வே துறை அடைந்திருக்கும் மோசமான நிர்வாக சீர்கேட்டையும் அதிகாரிகளின் அலட்சியத்தையும் வெளிபடுத்துவதாக பார்க்கப்படுகிறது.

இரயில் சேவை

பிரிட்டிஷாரின் வருகையோடு இந்தியாவிற்கு அறிமுகமான இரயில் சேவையானது பல்வேறு மன்னராட்சி பிரதேசங்களாக இருந்த இந்தியாவை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றியது. வேகமான சரக்கு போக்குவரத்திற்கும் பயணத்திற்கும் இந்த இரயில் சேவையே ஆதாரமாயிருந்தது. மேலும், இந்தியாவின்  பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டத்தில் இரயில்வே துறையின் பங்கை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

விரைவான மற்றும் பாதுகாப்பான பயணங்களுக்கு இன்றளவும் முதலிடத்தில் இருப்பது ரயில் சேவைகள் தான். ஆனால், இப்போது நாம் பயணிக்கும் விரைவு ரயில்களும் பாதுகாப்பான இரயில் பயணமும் ரெடிமேடாக நமக்கு கிடைத்தவை அல்ல. பல்வேறு மோசமான விபத்துகளும் அதன் வழி பெற்ற படிப்பினைகளும், தொழில் நுட்ப வளர்ச்சியும் இன்றைய இரயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றியுள்ளன. நேற்று இரயில் விபத்தானது அதனை கேள்விக்குள்ளாக்கியது.

ஆங்கிலேயரின் வெளியேற்றத்தின் போது நலிவடைந்திருந்த இரயில்வே துறை மத்திய அரசால் 5 ஆண்டு திட்டங்களின் மூலம் மேம்படுத்தப்பட்டது. நிலக்கரியும், நீராவி இஞ்சினுமாக தொடங்கப்பட்ட இந்த இரயில் சேவை டீசல் என்ஜின், மின்சார இரயில் என வளர்ந்து, இன்று வந்தே பாரத் போன்ற அதிவேக இரயில்களாக உருமாறியுள்ளது. என்றாலும், இரயில் விபத்துகளுக்கும் இந்தியாவில் குறைவில்லை என்றே கூறலாம்.

முக்கிய இரயில் விபத்துகள் 

ஆரம்ப காலத்தில் இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் ஏற்பட்ட விபத்துகளால் 1950-70 வரையிலான 20 ஆண்டு காலத்தில், 1400க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். இதில் ஐதராபாத் யசந்தி ஆற்றுப்பால விபத்து, அரியலூர் மருதையாறு இரயில் பாலத்தில் ஏற்பட்ட விபத்து ஆகியவை பெருமளவு பயணிகளின் உயிர்களை பலி வாங்கின.  முக்கியமாக 1964ம் அண்டு, டிசம்பர் மாதம் 23ம் தேதியன்று பாம்பன்-தனுஸ்கோடி பயணிகள் ரயில் ஒன்று அப்போது வீசிய சூறாவளியில் சிக்கி கடலில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் மட்டும் 126 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

1981ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதியன்று பீகார் மாநிலத்தில் மான்சி மற்றும் சகார்சா இடையே சுமார் 800க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ரயில் ஒன்று பாக்மதி எனும் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் மீட்பு பணிகளில் ஏற்பட்ட தோய்வு காரணமாக சுமார் 750க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இது போன்ற விபத்துகளை எதிர்கொள்ள இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்பை தாங்கும் அளவிற்கு டீசல் என்ஜின்கள் வடிவமைக்கப்பட்டதோடு, இரயில் பாதைகள், பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளும் முறைப்படுத்தபட்டன. 1985ல் நீராவி என்ஜின்கள் முற்றிலுமாக பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டன.


1981க்கு பின்னர் இயற்கை சீற்றங்களால் இரயில் விபத்துகள் ஏற்படுவது குறைந்து, இரு ரயில்கள் மோதிக்கொள்ளும் விபத்துகளே பெரும்பாலும் நடைபெறத் தொடங்கியது. குறிப்பாக,1995ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி புது டெல்லியிலிருந்து பூரி சென்றுக்கொண்டிருந்த புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத் அருகே நின்று கொண்டிருந்த காளிந்தி எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இதில் சுமார் 305 பயணிகள் வரை உயிரிழந்தனர்.

பின்னர், 1998ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி கொல்கத்தாவிலிருந்து ஜம்மு நோக்கி சென்றுக் கொண்டிருந்த ரயில் ஏற்கெனவே தடம் புரண்டு இருந்த ஃபிராண்டியர் கோல்டன் டெம்பிள் மெயில் ரயிலின் பெட்டிகள் மீது மோதியதில் 212 பேர் உயிரிழந்தனர். இவையெல்லாம் பெரும் பாலும் இருரயில்கள் மோதிக்கொள்ளம் விபத்துகளாக இருந்தவையே.

பின்னர், இரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டதும்  சிக்னல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சியும் இந்த மாதிரியான விபத்துகளை குறைத்தன. மேலும் தொழில் நுட்ப வளர்ச்சியால் 2000க்கு பிறகு இரயில் விபத்துகள் பெருமளவு குறைந்திருந்தது. ஆங்காங்கே  மனித தவறுகளால் ஏற்படும் விபத்துகளே பெரும்பாலும் ஏற்பட்டன.  2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது சொந்த ஊரை நோக்கி சென்ற தொழிலாளர்கள் சிலர் இரயில் தண்டவாளத்தில் உறங்கியபோது 16 பேர் பரி்தாபமாக உயிரிழந்தனர். இது தான் இந்தியாவில் இதற்கு முன்னர் நடந்த பெரிய இரயில் விபத்தாகும்.

இரயில்வே அமைச்சர்கள் இராஜிநாமா 

1956ஆம் ஆண்டு சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்றுக்கொண்டிருந்த முத்துநகர் இரயில் மருதையாற்றில் திடீரென உருவான காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியதில் இரயில் ஆற்றோடு அடித்து செல்லப்பட்டது. இதில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏற்கனவே இரயில்கள் ஆற்றில் கவிழும் விபத்துகள் அதிகரித்து வந்த நிலையில் இந்த விபத்து நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விபத்திற்கு பொறுப்பேற்று இந்தியாவின் முதல் இரயில்வே துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகினார். அவரோடு இரயில்வே இணையமைச்சராக இருந்த அழகேசன் கூட தனது பதவியை இராஜிநாமா செய்தார்.

இதேபோல, 1999 ஆகஸ்ட் மாதம் 2ம் தேதியன்று மேற்கு வங்கத்தின் கைசல் ரயில் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த அவத் அசாம் எக்ஸ்பிரஸ் மீது, பிரம்மபுத்திரா மெயில் மோதியது. இதில் 285 பேர் உயிரிழந்தனர். இதனை ஒட்டி அப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இரயில்வேதுறை அமைச்சராக இருந்த நிதிஷ் குமார்  தனது பதவியை இராஜினாமா செய்தார்.  மேலும் 2000த்தில் மம்தா பானர்ஜி 2017ல் சுரேஷ் பிரபு போன்றோர் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர் என்றாலும் அவை ஏற்கபடவில்லை.

இந்நிலையில் நேற்று ஒடிசாவில் நடந்த இரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரியுள்ளார்.

தொடக்க காலத்தில் இந்தியாவில் பின்தங்கிய தொழில் நுட்பத்தாலும் முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாதாலும் விபத்துகள் ஏற்பட்டது எதார்த்தமானதே. ஆனால் மின்மயமாக்கப்பட்ட பாதை, இன்டர்லாக்கின் சிக்னல்கள், ஜிபிஎஸ் தொழில்நுட்பம் என வளர்ந்து விட்ட இக்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடப்பதை வெறும் தொழில்நுட்ப கோளாறு என்று மட்டுமே கூறி கடந்து விட முடியுமா?

-ச.பிரபாகரன்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com