"கட்டிய வீட்டிற்கு அடிக்கல் நாட்டிய மத்திய அமைச்சர்"ஆர்வகோளாரில் புதுக்கோட்டை பாஜக!

"கட்டிய வீட்டிற்கு அடிக்கல் நாட்டிய மத்திய அமைச்சர்"ஆர்வகோளாரில் புதுக்கோட்டை பாஜக!
Published on
Updated on
2 min read

புதுக்கோட்டையில் கட்டி முடியும் தருவாயில் உள்ள வீட்டிற்கு மத்திய அமைச்சரை அழைத்து அடிக்கல் நாட்டியுள்ளனர் அம்மாவட்ட பாஜகவினர். 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சேதுராபட்டி  ஊராட்சியை சேர்ந்தவர் செல்வம் அழகப்பன். பாஜக கட்சியினுடைய புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவராக உள்ளார். கடந்த 23 ஆம் தேதியன்று இவரது தாயார் பெயரில் கட்டப்படும் வீட்டிற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வி.கே.சிங் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் புதுக்கோட்டை மாவட்ட பாஜகவினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

ஆனால் சர்ச்சை இதற்கு பின்னர்தான் தொடங்கியது. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த வீடு ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கிட்டத்திட்ட முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் கட்டி முடியும் தருவாயில் உள்ள இந்த வீட்டிற்கு மீண்டும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் நிதி உதவி பெற்று நடந்து வரும் இந்த வீட்டின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு சம்பந்தபட்ட ஊராட்சி மன்ற தலைவரோ வார்டு கவுன்சிலரோ அழைக்கப்பட வில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அந்த வார்டின் கவுன்சிலர் முருகானந்தம் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற போது அங்கு அவருக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு மத்திய அமைச்சர் இது போன்ற ஒரு நிகழ்விற்கு வந்திருப்பதே அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்பதே அது. இந்நிலையில் பாஜகவினர் தங்களது பாப்புலாரிட்டிக்காகவும், அரசியல் உள்நோக்கத்தோடும் கட்டிட பணி நடந்து கொண்டிருக்கும் வீட்டிற்கு அடிக்கல் நாட்டும் விழா நடத்தியுள்ளதாகவும் மேலும் பிஜேபி கட்சியின் லெட்டர் பேடில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் போலி அனுமதி ஆணை வழங்கியுள்ளதாகவும் அந்த வார்டின் கவுன்சிலர் முருகானந்தம் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com