ஆவின் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் மீது பல்வேறு குற்றச்சாட்டு எழுந்தது மேலும் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று கொண்டு பணி ஒதுக்கியதாகவும் புகார் எழுந்தது. பணம் வாங்கிய நபர்களுக்கு வேலை கொடுக்கப்படவில்லை எனவும் வாங்கிய பணமும் திருப்பிக் கொடுக்கப்படாத நிலையில் உச்சநீதிமன்றம் வரை வழக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நிதி அமைச்சராக பதவியேற்ற பழனிவேல் தியாகராஜன் போக்குவரத்து துறையின் கீழ் நேரடி பணி நியமனத்தை ரத்து செய்து அதனை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்திற்கு கீழ் அதிரடியாக கொண்டு வந்தார். இதை போன்ற முறைகேடுகள் ஆவின் நியமனங்களிலும் நடைபெறுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. ஆவின் பணி நியமனங்கள் ஆவின் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்ததால் பணி நியமனத்திற்காக பணம் வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஆவின் பணி நியமனத்தையும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் கீழ் கொண்டு வரும் படி உத்தரவிட்டுள்ளார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
இதனைத் தொடர்ந்து ஆவினில் 322 பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-நப்பசலையார்