சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை காலை இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இந்தி திணிப்பு பரிந்துரை:
மத்திய அரசின் மும்மொழி கொள்கை குறித்து நீண்டகாலமாக பிரச்னை வெடித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், சமீபத்தில் அலுவல் மொழி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பரிந்துரைத்தார். ஆனால், அமித்ஷாவின் பரிந்துரைகள் இந்தியை திணிக்கும் விதமாக இருந்ததால் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. இதனிடையே அலுவல் மொழி தொடர்பாக அமித்ஷா குழுவினர் அளித்த பரிந்துரைகளுக்கு எதிராக அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சி தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள்:
அதே சமயம், மத்திய அரசின் இந்தி கொள்கைக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஆங்கிலத்தின் இடத்தை இந்தியைக் கொண்டு நிரப்ப திட்டமிட்டு மத்திய அரசு செயல்படுவதாக விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கடண்டனம் தெரிவித்தார். அதேபோல், இந்தி திணிப்புக்கு எதிராக கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது, தமிழ் ஆர்வலர்களும், தமிழ் உணர்வாளர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு வைரமுத்து அழைப்பு:
இந்நிலையில், தமிழ் கூட்டமைப்பு சார்பில் இந்தித் திணிப்பை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை காலை ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவும் களமிறங்கி தனது எதிர்ப்பை வெளிபடுத்த உள்ளார். இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழ் எங்கள் மானம்...இந்தித் திணிப்பு அவமானம்...வாருங்கள் வள்ளுவர் கோட்டம் வல்லவர் கோட்டம் ஆகட்டும்...என அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து, தமிழ் எங்கள் அதிகாரம் இந்தித் திணிப்பு சர்வாதிகாரம் என்ற முழக்கம் எட்டுத் திசையும் எட்டட்டும்...வான்முட்டும் ஓசை தேன்சொட்டும் தமிழுக்குக் காப்புக் கவசம் கட்டட்டும்...எனவே, துடித்துக் கிடக்கும் தமிழர்களே வெடித்துக் கிளம்புங்கள்” என தமிழ்க் கூட்டமைப்பு சார்பில் வைரமுத்து அழைப்பு விடுத்துள்ளார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வைரமுத்து உடன் இணைந்து மேலும் பல கவிஞர்கள், பாடலாசிரியர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.