சப்தம் போடாமல் விளையாடுங்கள் கூச்சமே இல்லாமல் சொல்கிறார்கள் குழந்தைகளிடம்

சப்தம் போடாமல் விளையாடுங்கள் கூச்சமே இல்லாமல் சொல்கிறார்கள் குழந்தைகளிடம்
Published on
Updated on
4 min read

மனநலமே மகிழ்வான வாழ்வின் அடித்தளம்

ஒரு மனிதன் உயிர் வாழ அடிப்படை தேவையாக கருதப்படுவது உணவு, ஆடை மற்றும் இருப்பிடம். இம்மூன்றும் சுலபமாக கிடைத்த ஒருவன் அடுத்து ஆடம்பர தேவைகளான பேர், புகழ் மற்றும் பணத்தை நோக்கி ஓடுகிறான்.

மனிதனின் அடிப்படை தேவைகளாகட்டும் ஆடம்பர தேவைகளாகட்டும் இதையெல்லாம் மகிழ்ச்சியோடு அனுபவிக்க மிக முக்கிய அம்சமாக விளங்குவது தான் மனநலம். அந்த மனநலம் என்பது மிக ஆரோக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அது ஒருவரின் வாழ்க்கையை முடிவின் வரை கொண்டு சென்றுவிடும்.

மனநலம் என்பது வேறொன்றுமில்லை

மனநலம் என்பது வேறொன்றுமில்லை.. நம் வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதைப் பொறுத்து நம்முடைய மனதின் தன்மை அமையும்.. அதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டாக நான் படித்த ஒரு செய்தியை இங்கு பகிர்கிறேன்...

"நம் பயணம் மிகவும் குறுகியது"

ஒரு பெண் பேருந்தில் ஏறி ஒரு ஆணின் அருகில் அமர்ந்து, இடம் போதாமையால் அவரை திட்டி கொண்டிருந்தாள்.  

அந்த நபர் அமைதியாக இருந்தபோது, ​​​​அந்தப் பெண் உங்களை திட்டிக் கொண்டு இருக்கும் போது, ஏன் அமைதியாக இருந்தீர்கள் என்று அருகிலிருந்த பெண்மணி கேட்டார்.

அந்த மனிதன் அவருக்கு புன்னகையுடன் இப்படி பதிலளித்தார்: "ஏனெனில்
எனது பயணம் மிகக் குறுகியதாக இருப்பதால் முக்கியமற்ற ஒன்றைப் பற்றி வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்குகிறேன்.

இந்த பதில் அந்தப் பெண்ணை மிகவும் யோசிக்க செய்தது. மேலும் அவர் அந்த மனிதனிடம் மன்னிப்பும் கேட்டாள். மேலும் அவரது வார்த்தைகளை தனது சிந்தனையில் பதிய வைத்துக் கொண்டாள்.

இவ்வுலகில் நமது நேரம் மிகக் குறைவு என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும், பயனற்ற வாக்குவாதங்கள், பொறாமை, மற்றவர்களை மன்னிக்காதது, அதிருப்தி மற்றும் மோசமான அணுகுமுறைகள் ஆகியவை நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும் ஆபத்தானது.

யாராவது உங்கள் மனதை காயப்படுத்தினார்களா?  அமைதியாய் இருக்கவும். ஏனெனில்
 நம் பயணம் மிகவும் குறுகியது.

யாராவது உங்களைக் காட்டிக்கொடுத்தார்களா, மிரட்டினார்களா, ஏமாற்றினார்களா அல்லது அவமானப்படுத்தினார்களா?
ஓய்வெடுங்கள் - மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள். ஏனெனில்
நம் பயணம் மிகவும் குறுகியது.

 காரணம் இல்லாமல் யாராவது உங்களை அவமானப்படுத்தினார்களா?
அமைதியாய் இருக்கவும்.  புறக்கணிக்கவும்.
ஏனெனில்
நம் பயணம் மிகவும் குறுகியது.

உங்களுக்குப் பிடிக்காத கருத்தை யாராவது தெரிவித்திருக்கிறார்களா?
அமைதியாய் இருக்கவும்.  புறக்கணிக்கவும்.  மன்னிக்கவும்,மறக்கவும் பழகி கொள்ளுங்கள். ஏனெனில்
நம் பயணம் மிகவும் குறுகியது.

சிலர் நமக்கு என்ன பிரச்சனைகளை கொண்டு வந்தாலும்,
அதை நாம் நினைத்தால்தான் பிரச்சனை, நினைவில் கொள்ளுங்கள்.
நாம் ஒன்றாக பயணம் செய்வது மிகவும் குறுகியதாக உள்ளது.

நம் பயணத்தின் நீளம் யாருக்கும் தெரியாது. நாளை என்பதை யாரும் பார்க்கமுடியாது. அது எப்போது நிறுத்தப்படும் என்றும் யாருக்கும் தெரியாது.

நாம் ஒன்றாகப் பயணம் செய்வது மிகக் குறைவு.

நண்பர்களையும் குடும்பத்தினரையும் மற்றும் நமக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சக ஊழியர்கள், மேலதிகாரிகள் அனைவரையும் பாராட்டுவோம்.  அவர்களிடம் நல்ல நகைச்சுவையுடன் பேசவும் அவர்களை மதிக்கவும்.  மரியாதையாகவும், அன்பாகவும், மன்னிப்பவராகவும் எப்போதும் இருப்போம். ஏனெனில் நம் பயணம் மிகவும் குறுகியது...

உங்கள் புன்னகையை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.... நீங்கள் விரும்பும் அளவிற்கு அழகாக இருக்க உங்கள் பாதையை தேர்ந்தெடுங்கள் எப்போதும் மறக்காதீர்கள்... "உங்கள் பயணம் மிகவும் குறுகியது"

கூச்சமே இல்லாமல் சொல்கிறார்கள் குழந்தைகளிடம்

மனநல நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியவர்கள் குழந்தைகள் தான். சிறுவர் சிறுமியர்களாக இருக்கும் குழந்தைகள் தான் பின்னாளில் வயது வந்த ஆணாகவோ பெண்ணாகவோ வளர்ந்து வந்து சமூகத்தில் தங்களுக்கு நேரும் அனைத்தையும் கையாள போகிறவர்கள். நாம் என்னவாக வளர்கிறோம், என்னென்னப் பண்புகளை கொண்டிருக்கிறோம் என்பதெல்லாம் குழந்தை பருவத்தில் நமக்கிருக்கும் உளவியலை பொறுத்தது.


சப்தம் போடாமல்
விளையாடுங்கள்
கூச்சமே இல்லாமல்
சொல்கிறார்கள்
குழந்தைகளிடம்..!


கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய இந்த கவிதையை நான் படித்த போது என் வீட்டுப் பிள்ளைகளை அமைதியாய் விளையாட சொல்லி அதட்டியது நினைவில் வர சற்று குற்றவுணர்ச்சிக்கு ஆளானேன். குழந்தைகளுக்கு வேறென்ன தெரியும் விளையாடுவதைத் தவிர, அதையும் சத்தமின்றி விளையாட சொல்வது எவ்வளவு அபத்தமானது என்பதை அன்று தான் உணர்ந்தேன்.


குழந்தைகளின் மனநிலை ஆரோக்கியமாக இருக்க ஒரே வழி விளையாட்டு மட்டும் தான். பல்வேறு குணங்களை கொண்ட குழந்தைகள் ஒன்று சேர்ந்து விளையாடும் போது தான் தன்னுடன் விளையாடும் சக  குழந்தைகளின் பண்புகளைப் பற்றி தெரிந்துக்கொள்ள முடியும். 


சில குழந்தைகள் விட்டுக் கொடுக்கும், சில குழந்தைகள் விளையாட்டில் ஏமாற்றும், சில குழந்தைகள் சண்டையிடும் அதை சில குழந்தைகள் சமாதானப்படுத்தும். விளையாட்டின் மூலம் பெற்றோர் தங்கள் குழந்தையின் குணநலன்களை அறிந்து கொள்ளக் கூடும்.

இவ்வாறு குழுக்களாக இணைத்து விளையாடும் குழந்தைகள் தான் வளர்ந்து பெரியவர்களாகும் போது சக மனிதர்களுடனும், சமூகத்துடனும் இணைந்து செயல்படுவார்கள். தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எதுவாகயிருந்தாலும் துணிச்சலோடும் தைரியத்தோடும் எதிர்கொள்வார்கள்.

ஆனால்.... சில வீட்டில் குழந்தைகள் விளையாட்டில் ஆர்வம் காட்டாமல் சக வயதினருடன் சேராமல் அமைதியாகவும், தனியாகவும் இருப்பார்கள். அக்குழந்தைகளிடம் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்தி அவர்களை விளையாட்டில் ஈடுபடவும், சக வயதினருடன் பழகவிடவும் வேண்டும். இல்லையென்றால் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பற்றி யாரிடமும் மனம் திறந்து பேச முடியாமல் தவறான முடிவுகளுக்கு தள்ளப்படுவார்கள்.

மனநலம் குறித்து நடிகை தீபிகா படுகோன்

தீபிகா படுகோன் நீண்ட காலமாக மனநலம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ஒரு காலத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வந்த அவர் 2015 இல் "தி லைவ் லவ் லாஃப்" (the live love laugh) என்ற அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்தார். உலக மனநல நாளை முன்னிட்டு தனது மனநல அறக்கட்டளையை விரிவுபடுத்தும் வகையில் சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டின் திருவள்ளூரில் பரப்புரை மேற்கொண்டார்.


தனது பயணத்தின் போது, மனநோயைக் கையாள்வதின் முக்கியத்துவம் பற்றி பேசினார். சமீபத்தில் தீபிகா அளித்த பேட்டியில், தனது மனநோயின் அறிகுறிகளை அம்மா அடையாளம் காணவில்லை என்றால், இன்று நான் எந்த நிலையில் இருந்திருப்பேன் தெரியவில்லை என்று கூறினார்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவரின் மனநலம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவர்களை கவனிக்கும் பராமரிப்பாளர்களின் மனநலமும் முக்கியம் என்பதை அறிவேன். என் பராமரிப்பாளர் எனக்கு உதவுவதில் முனைப்புடன் செயல்படவில்லை என்றால் இன்று நான் எந்த நிலையில் இருந்திருப்பேன் என்று என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை என்று உணர்ச்சிப் பொங்க பேசினார் தீபிகா.

மனநோய் என்பது பைத்தியமல்ல- மனநல மருத்துவர் ஷாலினி

மக்கள் அனைவரும் சிறந்த மனநலத்துடன் இருப்பதை குறிக்கோளாக வைத்துக் கொள்ள வேண்டும். மனநோய் என்பது பைத்தியமல்ல; சமூக சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களின் காரணங்களால் மனரீதியாக பாதிக்கப்படுவது. நாம் பார்க்கும் மனிதர்களில் பத்துக்கு ஐந்து பேர் மனநல நோயால் பாதிக்கப்பட்டவர்களாக தான் இருப்பார்கள். 


தூக்கமின்மையால் அவதிப்படுபவது, தூக்கத்தில் பேசுபவது, தூக்கத்தில் கை கால்களை அசைப்பது, அதிகமாக சாப்பிடுவது, உணவே சாப்பிடாமல் இருப்பது, வித விதமான உணவுகளை உண்பது, தேவையற்ற அச்சம், விரக்தி, அளவற்ற உற்சாகம் இவை அனைத்தும் மனஅழுத்தத்தின் காரணிகளாக இருக்கக்கூடும்.


மனநல குறைபாடு ஏற்பட முதல் முக்கிய காரணம் நம்முடைய மரபணுக்கள். ஆம்.... மரபணுக்களில் ஏற்படும்  மாற்றங்கள் மூலம் மனநல குறைபாடுகள் ஏற்படலாம். மரபியலாக உண்டாகும் மனநல குறைபாடுகளை நம்மால் சரி செய்ய முடியாது. 

இரண்டாவது நமது சமூக அமைப்பு... சாதி, மதம், ஆதிக்கம், பெண்ணடிமை இதன் காரணங்களாக ஏற்படும் மன அழுத்தங்கள்.

அடுத்து உளவியல் சிக்கல்கள்... நாம் எப்படி வளர்ந்திருக்கிறோம், என்னென்ன பண்புகளை கொண்டிருக்கிறோம் என்பது மூன்றாவது காரணிகள் என்று மருத்துவர் குறிப்பிடுகிறார்.

இந்த மனநோயினை கையாள நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு மக்களோடு இணக்கமாகவும், அன்புடனும், நம்மை சுற்றி ஆரோக்கியமான மனிதர்களை வைத்துக்கொள்ளவும் வேண்டும் என்றும் அதற்கு கீழ்வரும் திருக்குறள் ஒன்றையும் உதாரணமாக கூறுகிறார் மனநல மருத்துவர் ஷாலினி.


மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும் - குறள்

பொருள்:
நல்ல மனம் நிலைபெற்ற உயிர்க்கு உயர்வாம்; நல்லவர் கூட்டு எல்லாப் புகழையும் கொடுக்கும்.

------- அறிவுமதி அன்பரசன்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com