இனி நாங்கள் ஜீரோ இல்லை ஹீரோ...ஜெயக்குமாருக்கு தக்க பதிலடி தந்த வைத்திலிங்கம்!

இனி நாங்கள் ஜீரோ இல்லை ஹீரோ...ஜெயக்குமாருக்கு தக்க பதிலடி தந்த வைத்திலிங்கம்!
Published on
Updated on
1 min read

அதிமுக பொதுக்குழு வழக்கு தங்கள் தரப்புக்கு சாதகமான முறையில் வந்துள்ள நிலையில்  ஓபிஎஸ் இல்லத்தில், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு:

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற இருஅமர்வு கொண்ட நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்றும், தனிநீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை ரத்து செய்தும் உத்தரவிட்டனர். 

ஓபிஎஸ் மேல்முறையீடு:

இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார். அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான இந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஏழாவது அமர்வில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அதிமுக வழக்கில் நீதிமன்ற தீர்ப்புகள் மாறி மாறி வந்துகொண்டிருப்பதால் இன்றைய வழக்கு விசாரணை மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு:

அதன்படி இன்றைய விசாரணையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை என ஓபிஎஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுக்குழு குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். ஓபிஎஸ் தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணையை தசரா விடுமுறை முடிந்து விசாரிப்பதாக கூறிய நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பு வரும் வரை அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தக்கூடாது என அதிரடி உத்தரவையும் பிறப்பித்துள்ளனர்.

வைத்திலிங்கம் ஆலோசனை:

இன்றைய தீர்ப்பானது, ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பையடுத்து, கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில், வைத்திலிங்கம் ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், பொதுச்செயலாளர்  தேர்தல் நடத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பை வரவேற்கிறோம். 

இனி ஜீரோ இல்லை ஹீரோ:

கடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை  இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த தீர்மானம், ஓபிஎஸ் உட்பட ஆதரவாளர்களை நீக்கிய தீர்மானம் உட்பட அனைத்து தீர்மானங்களையும் உச்சநீதிமன்றம் அடுத்த விசாரணையின் போது ரத்து செய்யும்  என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், அரசியலில் நாங்கள் ஜீரோ என எடப்பாடி பழனிசாமி தரப்பில்  விமர்சித்தார்கள். ஆனால், இனி அரசியலில் தாங்கள் ஜீரோ இல்லை  ஹீரோ என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

முன்னதாக, செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் போது ஜெயக்குமார், இனி ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கை ஜீரோ என விமர்சனம் செய்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது, ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் நாங்கள் ஜீரோ இல்லை ஹீரோ என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com