நாடாளுமன்ற தேர்தலை ஓர் அணியில் எதிர்கொள்ள முடிவு? கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்!

நாடாளுமன்ற தேர்தலை ஓர் அணியில் எதிர்கொள்ள முடிவு? கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்!
Published on
Updated on
1 min read

பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலை ஓர் அணியில் எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், பாஜக அல்லாத கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தார். அதன்படி, நிதிஷ்குமார் தலைமையில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று அவருடைய வீட்டில் நடைபெற்றது. 

கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளர் சீதாராம் யெச்சூரி, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ்தாக்கரே, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர்அப்துல்லா, PDP கட்சியின் தலைவர் மெகபூபா முஃப்தி, கம்யூனிஸ்ட் எம்.எல் கட்சியின் பொதுசெயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இந்த கூட்டத்தில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது குறித்து எதிர்கட்சிகள் ஆலோசித்ததாக தெரிகிறது. பின்னர் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாசிச பாஜக அரசை முடிவுக்கு கொண்டு வருவோம் என வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜனநாயகத்தை காக்க, வேறுபாடுகளை களைந்து எதிர்கட்சியினர் ஓர் அணியில் திரள வேண்டுமென குறிப்பிட்டார். மேலும், ஆட்சி அதிகாரத்தில் பாஜக அல்லாத மாநில அரசுகள் பழிவாங்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

இதனிடையே, எதிர்கட்சிகளின் இந்த கூட்டத்தில் 16 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்று இருப்பதால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com