தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள நவாந்தகி பகுதியைச் சேர்ந்தவர் பிட்டல எல்ப்பா. 40 வயதான இவர் உள்ளூரில் ஆடு மாடுகளை மேய்க்கும் தொழிலாளியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 22-ம் தேதி சனிக்கிழமையன்று வீட்டை விட்டு வெளியேறிய எல்லப்பா வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது செல்போனில் இருந்து ஒருவர் எல்லப்பாவின் மனைவி விமலம்மா என்பவருக்கு தகவல் ஒன்றை அளித்தனர்.
அதாவது வியாகாபாரத் ரயில் நிலையத்தில் ரயில் விபத்து ஏற்பட்டதாகவும், அங்கு கிடந்த பிணத்தின் அருகே இந்த செல்போன் இருந்ததாகவும் கூறினர்.
இதைக் கேட்டு அதிர்ந்து போன விமலாம்மா இறந்தது எல்லப்பாதான் என எண்ணி, நேரில் சென்று பார்த்தார். ஆனால் முகம் முற்றிலும் சிதைந்த நிலையில் கிடந்த சடலத்தை தூக்கிச் சென்ற உறவினர்கள் எல்லப்பாவுக்கு இறுதிச் சடங்கு செய்து கொண்டிருநதனர்.
எல்லப்பாவின் உடலைப் பார்த்து கதறித் துடித்த உறவினர்கள் இறுதியில் பிரியா விடை கொடுக்க தயாராகினர். வீட்டுக்கு வெளியே பாடை தயார் நிலையில் இருக்க அப்போது திடீரென ஆட்டோ ஒன்று வந்து நின்றது.
யாரோ தூரத்து சொந்தம் வந்திருப்பதாக நினைத்தவர்கள் ஆட்டோவில் இருந்து இறங்கிய எல்லப்பாவைப் பார்த்து அதிர்ந்து போயினர். உடனே உறவினர் ஒருவர் நீ இன்னும் சாகலையா? என கேட்க எல்லப்பா தனக்கு நடக்கும் இறுதிச் சடங்குகளை நேரில் பார்த்து மிரண்டார்.
ரயிலில் பயணம் செய்தபோது மர்மநபர் ஒருவர் செல்போனை திருடி விட்டதாகவும், தொடர்பு கொள்ள முடியாததால் தாமதமாக வந்ததாகவும் கூறினார். இதையடுத்து அதிர்ச்சியுடன் கூடிய மகிழ்ச்சியும் அடைந்த உறவினர்கள், இறுதிச்சடங்கை நிறுத்தினர்.
அடையாளம் தெரியாத சடலம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்தவர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.