அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன், மருமகன் கட்சி பொறுப்புகள் பறிப்பு... காரணம் என்ன?

அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன், மருமகன் கட்சி பொறுப்புகள் பறிப்பு... காரணம் என்ன?
Published on
Updated on
2 min read

அமைச்சர் மஸ்தானின் தம்பியைத் தொடர்ந்து  மகன், மருமகனின் கட்சிப் பொறுப்புகளை பறித்து உத்தரவிட்டுள்ளது திமுக தலைமை..! பதவி பறிப்புப்புக்கு காரணம் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளருமான செஞ்சி மஸ்தான் 5 முறை செஞ்சி பேரூராட்சியின் தலைவராக இருந்துள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக செஞ்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 1994ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை, 20 ஆண்டுகள் செஞ்சி திமுக பேரூர் செயலாளராக இருந்தார் அமைச்சர் மஸ்தான்.

2014 ஆம் ஆண்டு மாவட்டச் செயலாளர் பதவி மஸ்தானுக்கு கொடுக்கப்பட்டதும், அவரது சகோதரர் காஜா நஜீர் செஞ்சி பேரூராட்சி செயலாளராக நியமிக்கப்பட்டார். 

அதேபோல அவரது மகன் மொக்தியார் செஞ்சி பேரூராட்சி தலைவராகவும் விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். அமைச்சர் மஸ்தானின் மருமகன் ரிஸ்வான் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக இருந்தார். 

அமைச்சர் செஞ்சி மஸ்தான் தமிழ்நாடு அமைச்சரவையில் பொறுப்பேற்றதில் இருந்தே அடிக்கடி பல்வேறு குற்றச்சாட்டுகளிலும் சிக்கி வருகிறார். முக்கியமாக மரக்காணம் விஷச்சாராய விவகாரம், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இடையே மோதல், உறவினர்களுக்கே முக்கியத்தும் உள்ளிட்ட புகார்களினால் நடவடிக்கை, வக்பு வாரிய சொத்துக்களை அபகரிப்பு போன்ற பல குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிராக வந்து கொண்டு இருந்தது. 

இதனிடையே சில மாதங்களுக்கு முன்பாக செஞ்சியில் நடந்த திமுக செயல்வீரர்களின் கூட்டத்தில் பிரச்சனை ஏற்பட்டு, நிர்வாகிகளுக்குள் தகராறு ஏற்பட்டது.  கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மரக்காணத்தில் ஏற்பட்ட கள்ளச்சாராய பலி தொடர்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தானின்  ஆதரவாளர் சாராய வியாபாரி மரூர் ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் விழுப்புரம் போலீசார் கைது செய்தனர்.

கள்ளச்சாராய விவகாரத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சகோதரர் காஜா நசீரின் செயலாளர் பதவியை பறித்து திமுக தலைமை கழகம் உத்தரவை பிறப்பித்து. இந்த நிலையைில் உட்கட்சிப்பூசல், திண்டிவனம் நகராட்சியில் 13 தி.மு.க கவுன்சிலர்கள் தனித்து இயங்கியது ஆகியவை அமைச்சர் மஸ்தானுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தின. 

மேலும் அமைச்சர் மஸ்தான் மருமகனிடமிருந்து மிரட்டல் வருவதாகவும், திண்டிவனம் நகராட்சியில் அவரின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும் கூறி, ராஜினாமா கடிதத்தில் 13 தி.மு.க கவுன்சிலர்கள் கையொப்பமிட்டு முதல்வரிடம் கொடுக்கப்போவதாக அறிவித்தனர். இந்தச் சம்பவம், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க-வில் மேலும் பரபரப்பைக் கூட்டியிருந்தது. 

இந்த நிலையில்  விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக இருந்த அமைச்சரின் மகன் மொக்தியார் அலி  பதவியும், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வந்த மருமகன் ரிஸ்வான் பதவியையும் பறித்து அதிரடி காட்டியுள்ளது திமுக.

அமைச்சர் மஸ்தான் வெளிநாட்டில் புனித உம்ரா பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், அவரின் மகனும், மருமகனும் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். இந்த அறிவிப்பு விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com