இனச்சண்டை என்பது இன்று நேற்று அல்ல, பல நூறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. மற்ற இனத்தவர்களும் மதத்தவர்களும் எவ்வளவு பாதிக்கப்படுகின்றனரோ, அந்த அளவிற்கும், ஏன், அதை விட சிறிது அதிகமாகவும், இஸ்லாமியர்கள் இது போன்ற மத இனச் சண்டைகளுக்கு பலியாகி வருகின்றனர். அதிலும் உலக அளவில் சர்ச்சையைக் கிளப்பியது ரோஹிங்யா முஸ்லிம்கள் தான்.
இடமின்றி தவித்த ரோஹிங்யாக்கள்:
இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்திற்காக, ரோஹிங்யாக்கள் படு பயங்கரமாக, தனது சொந்த இடத்திலேயே கொடுமைப்படுத்தப்பட்டதை அடுத்து, 2017ம் ஆண்டு, தங்களது உடமைகள், ஊர் உறவு என அனைத்தையும் விட்டு, அண்டை நாடுகளுக்குக் குடி பெயர்ந்தனர். அப்படி சென்றவர்கள் அனைவருக்கும் பிற நாடுகளில் இடம் கிடைத்துவிடவில்லை. கிடைத்தவர்களுக்கும் சரியான உணவு, மருத்துவ வசதி, தங்க இடம் போன்ற அடிப்படை வசதிகள் சரியாக கிடைக்கவில்லை. மேலும், படகுகளில் தப்பிச் சென்ற பெண்கள் குழந்தைகள் உட்பட பலர், நடுக்கடலிலேயே மூழ்கி இறந்ததாகத் தகவல்கல் கூறுகின்றன.
அண்டை நாடுகளில் தஞ்சம்:
இந்நிலையில், மியான்மரின் அண்டை நாடுகளான வங்காள தேசம் மற்றும் இந்தியாவைத் தஞ்சம் தேடி வந்த நிலையில், அவர்கள் சரியான முறையில் நுழையாததால், அவர்களை சட்டவிரோதமாக நுழைனதவர்கள் என்ற கணக்கில் அரசு வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக, அகதிகளாகவே இந்தியாவில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு, இந்தியர்கள் என்பதற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புது வதந்தி!
இந்நிலையில், இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம்களை, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் குடியிருப்புகளில் தங்க வைக்கலாம் என, அரசு முடிவெடுத்து வருவதாக, பல வதந்திகள் கிளம்பின. இதனைத்தொடர்ந்து, இந்திய உள்துறை அமைச்சகம், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், ‘வெளியான படி எந்தவொரு திட்டங்களையும் நாங்கள் வெளியிடவில்லை’ என பதிவிட்டுள்ளனர்.
ட்விட்டர் பதிவுகள்:
அதில், “சட்டவிரோத வெளிநாட்டினரான, ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பாக, சில ஊடகங்களில் செய்தி அறிக்கைகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக, டெல்லி, பக்கர்வாலாவில் உள்ள EWS குடியிருப்புகளை, சட்டவிரோத குடியேறிய ரோஹிங்யாக்களுக்கு வழங்க உள்துறை அமைச்சகம் (MHA) எந்த உத்தரவும் வழங்கவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.”
நாடு கடத்தும் திட்டம்:
மேலும், இரண்டாவது ட்வீட்டில், “ரோஹிங்கியாக்களை புதிய இடத்துக்கு மாற்ற டெல்லி அரசு முன்வந்தது. சட்டவிரோத வெளிநாட்டினரான ரோஹிங்யா தற்போதுள்ள இடத்திலேயே தொடர்வார்கள் என்பதை உறுதிப்படுத்துமாறு MHA, GNCTD க்கு உத்தரவிட்டுள்ளது. ஏனென்றால் MHA ஏற்கனவே MEA மூலம் சம்பந்தப்பட்ட நாட்டிற்கு அவர்களை நாடு கடத்தும் முடிவெடுத்துள்ளது.” என்று பதிவிட்டுள்ளது.
எதுவும் அறிவிக்கவில்லை:
அடுத்ததாக, “சட்டவிரோத வெளிநாட்டினர் சட்டத்தின்படி நாடு கடத்தப்படும் வரை தடுப்பு மையத்தில் வைக்கப்படுவார்கள். டெல்லி அரசு தற்போது இருக்கும் இடத்தை தடுப்பு மையமாக அறிவிக்கவில்லை. அதையும் உடனடியாக செய்யுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.” என்று பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளுக்குள்ளே குழப்பம்:
ஆனால், ஏற்கனவே மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா எப்போதும், அடைக்கலம் தேடி வரும் விருந்தாளிகளை வரவேற்றிருக்கிறது. மைல்கல் போல, இந்தியாவில் தஞ்சம் அடைந்த ரோஹிங்யா அகதிகளை டெல்லி பக்கர்வாலாவில் உள்ள EWS குடியிருப்புகளுக்கு இடமாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு அடிப்படை வசதிகளும், UNHCR அடையாள அட்டைகளும், 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்” என்று பிரதமரின் ட்விட்டர் பக்கத்தை டாக் செய்து பதிவிட்டிருந்தார். அந்த பதிவு தற்போது நீக்கப்பட்டிருந்தாலும், அதனை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து இணையத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.