மாண்டஸ் புயல் கடந்து வந்த பாதை...!

மாண்டஸ் புயல் கடந்து வந்த பாதை...!
Published on
Updated on
1 min read

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர புயலான மாண்டஸ் வலுவிழந்து நேற்று நள்ளிரவு 3 மணி அளவில் கரையைக் கடந்தது. இந்த நிலையில் மாண்டஸ் புயல் கடந்துவந்த பாதையை தற்போது பார்க்கலாம்...  

புயலாக மாறிய மாண்டஸ்:

டிசம்பர் 7-ம் தேதி வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடந்த 8-ம் தேதி  சென்னையில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயலாக நெருங்கி வரத்தொடங்கியது. அன்றிரவு பதினொன்றரை மணி அளவில் 350 கிலோமீட்டர் தொலைவில் இருந்த புயல், அடுத்தநாளான 9-ம் தேதி, வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னைக்கு 320 கிலோமீட்டர் தொலைவில் புயல் நெருங்கி வந்தது. 

சென்னையை நெருங்கி வந்த புயல்:

பின்னர் காலை ஐந்தரை மணி அளவில் 270 கிலோமீட்டராக நெருங்கி வந்தது. இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரவு விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. வெள்ளிக்கிழமை காலை எட்டரை மணிக்கு 260 கிலோமீட்டர் தொலைவிலும், மதியம் பன்னிரண்டரை மணி அளவில் 210 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் நெருங்கி வந்தது. இதனால் குறிப்பாக சென்னை, மாமல்லபுரம் பகுதியில் நாள் முழுவதும் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.

6.30 மணிக்கு கணிக்கப்பட்ட வானிலை மையம்:

மதியம் இரண்டரை மணி அளவில் 170 கிலோமீட்டர் தொலைவில் புயல் சென்னையை நெருங்கி வந்தது. நகரில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே வெள்ளிக்கிழமை மாலை ஆறரை மணி அளவில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டது. இந்த நிலையில், இரவு எட்டரை மணி அளவில் 130 கிலோமீட்டர் தொலைவில் புயல் நிலைகொண்டது. மாமல்லபுரத்தில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் நெருங்கியது. 

கரையைக் கடந்த புயல்:

பின்னர் சென்னையில் இருந்து 90 கிலோமீட்டரும், மாமல்லபுரத்தில் இருந்து 45 கிலோமீட்டரிலும் நெருங்கிய புயல் நள்ளிரவு 2 மணிக்கு மேல் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இந்தப் புயல் பெங்களூரு வழியாக வரும் 12-ம் தேதி அரபிக் கடலுக்குள் நுழையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஏமாற்றமடைந்த விவசாயிகள்:

இந்த ஆண்டுக்கான பருவமழையில் உருவான முதல் புயலான மாண்டஸ் மூலம் டெல்டா மாவட்டங்களுக்கு அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போதிய மழையைக் கொடுக்காமல் சென்றுள்ளது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com