பிறந்த குழந்தை பேசியது உண்மையா.... மருத்துவர்கள் கூறியது என்ன?!!

பிறந்த குழந்தை பேசியது உண்மையா.... மருத்துவர்கள் கூறியது என்ன?!!
Published on
Updated on
1 min read

பிறந்த சில மணி நேரங்களே ஆன குழந்தை திடீரென பேசியதாக தாய் ஒருவர் தெரிவித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.  உலகின் அதிசயங்களுக்கே சவால் விடும்படியாக பார்க்கப்பட்ட இந்த சம்பவத்தின் உண்மை நிலை என்ன?  நிஜமாகவே குழந்தை பேசியதா? 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்துள்ள சின்ன ஆழியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்திரன் - ரேவதி தம்பதியர்.  இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிய நிலையில் ஏற்கெனவே ஆண் குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருந்தார் ரேவதி. 

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு 7-ம் தேதியன்று காலையில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் உதவியுடன் களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட ரேவதிக்கு சுமார் 10 மணியளவில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. 

ஆரோக்கியமான உடல்நிலையில் பிறந்த இந்த குழந்தையைக் கண்டு தாய் மகிழ்ச்சியடைந்த நேரத்தில் திடீரென அங்கு நான் வந்துட்டேன் என்ற குரல் கேட்டிருக்கிறது.  இதைக் கேட்டு பதறிப்போன மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் எங்கிருந்து குரல் வருகிறது என திடுக்கிட்டுப் பார்த்த போது குழந்தைதான் பேசியதாக அனைவரும் நினைத்தனர். 

உடனே இதனை வீடியோவாக பதிவு செய்த செவிலியர்கள் அதனை சமூகவலைதளங்களில் பரப்பவே, சிறிது நேரத்தில் ஊர் மக்கள் அணிதிரளாக வந்து கண்காட்சியை பார்க்க வந்ததைப் போல கூடினர். 

குழந்தை பேசியதாமே.. என அனைவரும் மருத்துவமனையை சூழ்ந்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் சமூகவலைதளங்களிலும் பேசுபொருளானது.  வளர்ப்பு விலங்குகளான பூனை, நாய் ஆகியவை சில நேரங்களில் முனகுவதும், மனிதர்கள் பேசுவது போல காதில் விழும்.  அப்படித்தான் குழந்தையின் முனகலும் நான் வந்துட்டேன் என்பது போல இந்த தாய்க்கு கேட்டிருக்கலாம். 

உலகிலேயே எந்த மூலையிலும் இப்படியொரு நிகழ்வு நடைபெறுவதற்கு சாத்தியமே இல்லை என்றும், சுமார் 15 மாதங்களுக்கு பிறகுதான் குழந்தையானது பேசுவதற்கே தொடங்கும் என்றும் மருத்துவர்கள் கருத்து தெரிவித்தாலும், தனது குழந்தைதான் பேசியது என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார் இந்த தாய்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com