மசோதா நிறைவேற்றிய கையோடு ...! வெளிநாடு செல்லும் தொழில்துறை அமைச்சர்...!! 

மசோதா நிறைவேற்றிய கையோடு ...! வெளிநாடு செல்லும் தொழில்துறை அமைச்சர்...!! 
Published on
Updated on
2 min read

தொழிலாளர்களின் வேலை நேரத்தை நீட்டிக்க மசோதா நிறைவேற்றிய கையோடு  முதலீடுகளை ஈர்க்க தொழில்துறை அமைச்சர் வெளிநாடு செல்ல இருக்கிறார். 

டென்மார்க், பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் தொழில்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு ஒரு வார காலம் அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இன்று நள்ளிரவு சென்னையில் இருந்து டென்மார்க் புறப்படும் குழுவில் தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் அமைச்சருடன் செல்ல உள்ளனர். இதில் டென்மார்க் நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் காற்றாலை தொடர்பான நிறுவனங்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க உள்ளனர். அதைத் தொடர்ந்து, பின்லாந்து செல்லக்கூடிய தொழில் துறை குழுவினர், நோக்கியோ, ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக் நிறுவனத்தினரையும் சந்திக்க உள்ளனர்.

நோக்கியாே நிறுவனம் தமிழகத்தில் ஏற்கனவே இங்கு ஆலையை  நிறுவியுள்ளதால் அதன் விரிவாக்கத்திற்கு இந்த பயணம் முக்கியம் பங்கு வகிக்கும் என்று தெரிவித்துள்ளனர். ஸ்வீடன் நாட்டில் இருந்து எலக்ட்ரானிக் மற்றும் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அந்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்கள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளனர்.

இந்த மூன்று நாடுகள் பயணம் என்பது ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கான முன்னோட்டமாக இருக்கும் என்று குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

முன்னதாக நேற்று நிறைவடைந்த நிதிநிலை அறிக்கை கூட்டதொடரின் இறுதியில், தொழிலாளர்களின் வேலை நேரத்தை நீட்டிக்கும் விதமாக 'தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்த) சட்டம் -2023 சட்ட முன் வரைவு' தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசனால் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, மனித நேய மக்கள் கட்சி போன்றவை இச்சட்ட மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. கூட்டணி கட்சிகளின் எதிப்பையும் மீறி இம்மசோதா சட்டப் பேரவையில் நிறைவேறியது. இதனால் விசிக, சிபிஐ, சிபிஎம், மனித நேய மக்கள் கட்சி போன்றவை அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்ட முன் வரைவு பற்றி அளித்த விளக்கத்தில், “தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய நிறுவனங்கள் நம்முடைய தொழிலாளர்களின் வேலை நேரத்தில் ஒரு நெகிழ்வுத் தன்மை  இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்'' என குறிப்பிட்டிருந்தார். மேலும் மின்னணுவியல் துறை, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தித் துறை, மென்பொருள்துறை ஆகிய தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும் எனவும் கூறியிருந்தார்.

இச்சட்ட முன் வரைவுக்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் இலாபத்தேவையை மட்டுமே கருத்திற்கொண்டு செய்யப்பட்டுள்ள இச்சட்டத்திருத்தங்களின் மூலம், தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளை அடகு வைக்க முயலும் திமுக அரசின் தொழிலாளர் விரோதப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது'' எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட தொழிற்துறை அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணம் தொழிலாளர்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com