முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்.....!!!

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்.....!!!
Published on
Updated on
2 min read

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் மு.க.ஸ்டாலின்.  தி.மு.க.வில் இவரின் பங்களிப்பு மற்றும் இவர் கடந்து வந்த பாதையை விவரமாக காணலாம்.

மூன்றாவது:

திமுக எனும் பேரியக்கத்தின் இரண்டாவது தலைவராகவும்,  தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 2-வது முறையாக தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் மு.க.ஸ்டாலின்.  1953-ம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி கருணாநிதிக்கு 3-வது மகனாக பிறந்தவர் ஸ்டாலின். 

திமுக கொள்கையால்:

சிறுவயதில் இருந்தே திமுக கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஸ்டாலின் 1966-ம் ஆண்டு அவரது 13வது வயதில் "இளைஞர் திமுக" என்ற அமைப்பை தொடங்கினார் ஸ்டாலின்.  1967-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட தனது தந்தை கருணாநிதியை ஆதரித்து வாக்கு சேகரித்தார் 14 வயது ஆன ஸ்டாலின். 

முதல் பதவி:

அதன் பின்னர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் 75-வது வட்டத்தின் பகுதி பிரதிநிதியாக ஸ்டாலின் தேர்ந்தெடுகப்பட்டார்.  அதுதான் அவருக்கு வழங்கப்பட்ட முதல் கட்சி பதவி.

இளைஞரணி:

ஸ்டாலின் தொடங்கிய இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பு 1980-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி அதிகார்வப்பூர்வமாக,  திமுக இளைஞர் அணி என அறிவிக்கப்பட்டது.  இதில் நியமிக்கப்பட்ட 7 அமைப்பாளர்களில் ஸ்டாலினும் ஒருவராக இருந்தார்.  1983-ல் அந்த அமைப்பின் செயலாளராக மாற்றப்பட்டார் ஸ்டாலின்.  கிட்டதட்ட 30ஆண்டுகளுக்கு மேலாக திமுக இளைர் அணி செயலாளராக இருந்தார். 

முதல் மேயர்:

1996-ல் சென்னை மாநகர மேயர் தேர்தலில் முதல் முறையாக நேரடியாக மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையை பெற்றவர் மு.க.ஸ்டாலின்.  சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் முக்கியமான 10 இடங்களில் அவர் அமைத்த மேம்பாலங்கள் இன்றளவும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

தந்தைக்கு பிறகு:

திமுகவின் பொருளாளர், செயல் தலைவர் போன்ற பதவிகளை வகித்த அவர், கருணாநிதியின் மறைவுக்குப் பின் தி.மு.க.வின் தலைவரானார்.  தொடர்ந்து 2-வது முறையாக திமுக-வின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

முதல் முறையாக:

2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, 2021 மே 7-ம் தேதி "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" என்று கூறி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.  அவரது பதவியேற்பில் மனைவி துர்கா ஸ்டாலினின் கண்ணீரை யாராலும் மறக்க முடியாது.

திட்டங்கள்:

அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம்,  இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், போன்ற எண்ணற்ற திட்டங்களை கொடுத்து மக்களின் முதலமைச்சராக நிற்கும் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை கொண்டாடுவதில் மக்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி கொள்வதாகவே தெரிகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com