"நான் இந்தியா முழுவதும் பயணம் செய்தேன், பிச்சைக்காரன், திருடன் என ஒருவரை கூட பார்க்க முடியவில்லை. இந்த நாட்டில் நான் கண்ட அதிக அளவு செல்வம், உயர்ந்த ஒழுக்க விழுமியங்கள், மக்களின் தகுதி கண்டு ஆச்சரியமடைந்தேன். இந்த தேசத்தின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை உடைத்தால் ஒழிய, இந்த நாட்டை ஒருபோதும் கைப்பற்ற முடியாது என்பதை உணர்ந்த தருணம் அது. எனவே, அவர்களுடைய பழமையான கல்வி முறையை, அவர்களுடைய கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன், ஏனென்றால் இந்தியர்கள் வெளிநாட்டவரது கல்வி, கலாச்சாரம் அனைத்தையும் சிறந்தது, தங்களுடையதை விட பெரியது என்று நினைத்தால், அவர்கள் சுயமரியாதையை இழந்துவிடுவார்கள். கலாச்சாரம் சிதைந்து விடும். அந்த நாடு நாம் உண்மையான ஆதிக்கம் செலுத்தும் தேசமாக மாறும்”
இந்தியாவில் ஆங்கிலேய கல்வி முறையை புகுத்த வழிமுறை கூறிய கல்வியாளர் மெக்காலேவின் சிறப்பான முற்போக்கு தனமான சிந்தனை இது. எவ்வளவு அற்புதமான சிந்தனை அல்லவா. இதே வழிமுறையை கொண்டு இன்று வரை நாமே அறியாத வண்ணம் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறான் ஆங்கிலேயன்.
தந்திரமான போர்ச்சுகீசியர்கள்:
ஐரோப்பியர்கள் பலரின் வருகையை தொடர்ந்து ஆங்கிலேயர்களுக்கும் ஒருங்கிணைக்கப்படாத இந்தியாவுடன் வாணிகம் செய்யும் ஆசை ஏற்பட்டது. அனுமதி பெற்று வர வில்லியம் ஹாக்கைன்ஸ் அனுப்பப்பட்டார். போர்ச்சுகீசியர்கள் ஆதிக்கம் செலுத்தி வணிகம் செய்து கொண்டிருந்த காலம் அது. மொகலாய பேரரசர் ஜஹாங்கீர் அவைக்கு சென்றார் ஹாக்கின்ஸ். சலீம் எனப் பெரும்பாலும் அறியப்பட்ட ஜஹாங்கீர் காதலி அனார்க்களி நினைவாக குடிபழக்கத்திற்கு அடிமையாகி ஆட்சி செய்து கொண்டிருந்தார். போர்ச்சுகீசியர்களும் அவரது அவையில் இடம் பெற்றிருந்தனர். முதலில் ஹாக்கின்ஸ் அன்புடனே வரவேற்கப்பட்டார். ஹாக்கின்ஸ் ஜஹாங்கீரை ”திறமையான குடிகாரன்”எனவும் ஜஹாங்கீர் ஹாக்கின்ஸை “ஆங்கிலேய கான்” எனவும் அழைத்தனர். தங்களுக்கு போட்டியாக யாருமே இருக்க கூடாது என நினைத்த போர்ச்சுகீசியர்கள் தந்திரமாக பகைமையை ஏற்படுத்தினர். இதனால் ஹாக்கின்ஸ் அரசவையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.
ஆங்கிலேயரின் விடாமுயற்சி:
தோல்வியை ஒத்துக் கொள்ள விரும்பாத ஆங்கிலேய அரசு தாமஸ் ரோவை மறுபடியும் அனுமதி பெற்றுவர அனுப்பியது. ஜஹாங்கீரை முழுமையாக அறிந்திருந்த ரோ அவருக்கு நாட்டிலிருந்து விலை மதிப்பு மிக்க வைன் பரிசாக கொண்டு வந்தார். விரைவில் இருவரும் நெருங்கிய தோழர்களாக மாறினர். அவர்களின் தோழமை ஆங்கிலேயர் சூரத்தில் வணிகம் செய்யும் உரிமையை பெற்று தந்தது. மிக மகிழ்ச்சியுடன் அளிக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் விளைவை திறமையான குடியாளரான ஜஹாங்கீர் அறிந்திருக்கவில்லை. அவருடைய வாரிசுகள் அடிமை வாழ்க்கை வாழ போகின்றனர் என்பதையும் அப்போது அவர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயன்:
சூரத்தில் முதலில் தனது வணிக தலத்தை அமைத்தான் ஆங்கிலேயன். அவனுக்கு போட்டியாக இருந்த அனைவரையும் விலைக்கு வாங்கினான் அல்லது போரில் அழித்தான். அவனுக்கு முன்னரே வந்த டச்சுக்காரர்கள் டேனியர்களின் அனைத்து வணிக பகுதிகளையும் விலைக்கு வாங்கினர். அவனுக்கு ஒரே வணிக போட்டியாளன் போர்ச்சுகீசியன் மட்டுமே. அவனையும் ஒழிக்க திட்டம் தீட்டினான். போர்ச்சுகீசியர்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து அரசர்களையும் ஒப்பந்தம் மூலம் அல்லது போர்கள் மூலம் வீழ்த்தினர் ஆங்கிலேயர். தனித்துவமான தந்திரங்கள் மூலமாக போர்ச்சுகீசியரின் பெரும்பான்மையான வணிக தலங்களை கைப்பற்றினர். காலப்போக்கில் சிறிய பகுதிகளில் வணிகமும் ஆட்சியும் செய்தனர் போர்ச்சுகீசியர்கள்.
அடிமையான கதை:
ஆங்கிலேயர் வணிகம் செய்வதை மட்டும் நோக்கமாக கொண்டிருக்கவில்லை என்பதை அரசர்கள் மெதுவாகவே உணரத் தொடங்கினர். அவர்கள் உணர தொடங்கியபோது பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியிருந்தனர் ஆங்கிலேயர்கள். பிரித்தாளும் கொள்கை ஆங்கிலேயர்களுக்கு வெகுவாக கைகொடுத்தது. ஒருங்கிணைக்கப்படாத இந்தியாவை அவர்களின் மூலதன பொருள்களை விளைவிக்கும் நிலங்களாக மட்டுமே எண்ணினர் போலும். அதிக படியான வளங்கள் சுரண்டப்பட்டு அவர்களின் நாட்டுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டன. எதிர்த்தவர்களை கொன்றும் குவித்தனர். ஒருங்கிணைக்கப்படாத இந்திய மக்களின் நலன் விரும்பிகள் என அவர்களை அவர்களே விளம்பரப்படுத்தினர். இந்தியர்களின் கலாச்சாரத்தை வளர்க்க வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகிகள் எனவும் கூறிக்கொண்டனர். அனைவரையும் வீழ்த்தி பேரரசாக மாறியது சாமியார் வேடமணிந்த பூனையை போன்று வணிகர்கள் என்ற பொய்வேடம் அணிந்த ஆங்கிலேயர்கள்.
”சூரியன் அஸ்தமிக்காத பரந்த பேரரசு, அதன் எல்லைகள் இன்னும் கண்டறியப்படவில்லை." வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயன் பேரரசாக மாறிய கதையை அடுத்த பகுதியில் விரிவாக காணலாம்.
மேலும் படிக்க: வணிகம் முதல் காலனித்துவம் வரை........!!!!!