‘என்னடா இங்க இருந்த பஸ்ஸ காணோம்...’ அடையாளத்தை இழந்துவரும் அரசுப் பேருந்துகள்

ராமநாதபுரத்தில் அரசுப் பேருந்துகள் தனியார் நிறுவனங்களால் மூடப்பட்டிருப்பதால் பயணிகள் கடும் குழப்பமடைந்துள்ளனர். சாலையில் செல்வது அரசு பேருந்தா? விளம்பர வாகனமா என்றே கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு அப்படி என்ன செய்தார்கள் நம் போக்குவரத்துத்துறை அதிகாரிகள்?
‘என்னடா இங்க இருந்த பஸ்ஸ காணோம்...’ அடையாளத்தை இழந்துவரும் அரசுப் பேருந்துகள்
Published on
Updated on
2 min read

அரசு போக்குவரத்துத்துறையில் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்கும் வகையில், கடந்த 2022-ம் ஆண்டில் இருந்து பேருந்துகளில் தனியார் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி அரசு பேருந்தின் இருபுறங்களிலும், பின்புறமும் தனியார் நிறுவனம், விளம்பரம் செய்து கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது.

இதில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் பணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறைக்கே சென்றடையும். போக்குவரத்துறையின் நஷ்டத்தை சரி செய்வதற்கே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் தற்போது எல்லைமீறி சென்றிருப்பதுதான் காலக்கொடுமை.

தமிழ்நாடு அரசின் சார்பில் இயங்கும் ஏ.சி. பேருந்துகள் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களின் விளம்பர வாகனமாகவே காட்சியளித்து வருகின்றன.

பொதுவாக ஏ.சி. பேருந்துகளில் ஜன்னல்கள் வைக்கப்படுவதில்லை. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், வெறும் வாசலை மட்டும் விட்டுவிட்டு பேருந்தையே விளம்பரங்களால் மூடி விடுகின்றனர்.

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை மதுரை மாநகருக்கு ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்துகளில் முழுக்க முழுக்க மூன்று புறமும் தனியார் நிறுவனங்களின் ஸ்டிக்கர்களை காண முடிகிறது. ஹேவல்ஸ் ஃபேன் விளம்பரத்தில் தொடங்கி, உள்ளுர் தனியார் பொறியியல் கல்லூரி விளம்பரங்கள் வரை ஒட்டப்பட்டுள்ளது.

இதனை பார்க்கும்போது, இது அரசு பேருந்தா? இல்லை தனியார் நிறுவனங்களின் விளம்பர வாகனமா என்பதே தெரியாத அளவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

நஷ்டத்தை சமாளிப்பதற்காக அரசு ஓர் முடிவை எடுத்திருந்தாலும், அதற்காக இப்படியா விளம்பர ஸ்டிக்கர்களை ஒட்டுவார்கள் என பயணிகள் கொதித்தெழுந்தனர்.

அரசுப் பேருந்து என்பது மக்கள் பயன்பாட்டுக்குத்தானே தவிர, தனியார் நிறுவனத்தின் விளம்பரத்துக்கு அரசுப் பேருந்தை பயன்படுத்துவது எவ்வகையில் நியாயம்? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com