காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீண்டும் எம்.பி. பதவியை பெற்றார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, “ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்ப பெயரையே வைத்திருக்கிறார்கள்” என்று சர்ச்சைக்குரிய வகையில் ராகுல்காந்தி பேசியிருந்தார். இதனையடுத்து, மோடி சமூகத்தினரை இழிவுப்படுத்தும் விதமாக பேசியதாக கூறி ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. 3 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த ராகுல்காந்திக்கு எதிரான இந்த வழக்கு, 2024 மக்களவை தேர்தலையொட்டி, திடீரென கடந்த மார்ச் மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து வயநாடு தொகுதியின் எம்.பி.யான ராகுல்காந்திக்கு, சூரத் அமர்வு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததால், மக்களவை செயலகம் அப்பதவியிலிருந்து ராகுலை நீக்கியது. இதனால், ராகுல்காந்தி தனது எம்.பி. பதவியை இழக்க நேரிட்டது.
ஆனால், தற்போது ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ராகுல் காந்தியை மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை காங்கிரஸ் தரப்பில் வைக்கப்பட்டது. அத்துடன் இன்று நாடாளுமன்றத்திலும் இந்த கோரிக்கையை காங்கிரஸ் எழுப்பும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதனிடையே, ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய காட்டிய அவசரத்தை, திரும்பப் பெறுவதில் ஏன் காட்டவில்லை? ராகுல் மீதான தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தும், எம்.பி. பதவி நீக்கத்தை ஏன் திரும்பப் பெறவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.பி. பதவி நீக்கத்தை திரும்ப பெற்றால், ராகுல் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்துவிடுவார் என அச்சமா? என்று வினவி இருந்தார்.
இந்நிலையில், சிறைதண்டனை தீர்ப்பால் ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பறிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் தற்போது, ராகுல் காந்தியின் எம்.பி.பதவி தகுதி நீக்கத்தை ரத்து செய்து மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், ராகுல்காந்தி தான் இழந்த எம்.பி. பதவியை மீண்டும் பெற்று, வயநாடு தொகுதிக்கு மீண்டும் எம்.பி. ஆனார்.
அந்தவகையில், ராகுல்காந்தி இன்று நாடாளுமன்றம் வருகை புரிவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளியில் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நாளைய மக்களவை கூட்டத்திற்கு ராகுல்காந்தி எம்.பி. வருகை புரிவார் என்று காங்கிரஸ் வாட்டாரங்களில் கூறப்படுகிறது.