மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம் - ஆம்ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் சஸ்பெண்ட்!

மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம் - ஆம்ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் சஸ்பெண்ட்!
Published on
Updated on
1 min read

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


கடந்த 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் அறிக்கை கோரி எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கியது.

இந்த நிலையில் இன்று அவை கூடியபோது மணிப்பூரின் 80 நாட்கள் நிலையை பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிக்கையாக அளிக்க வேண்டும் எனக்கூறி எதிர்கட்சிகள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டன. இதனால் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் ஜெக்தீப் தன்கர் அறிவித்தார்.

மீண்டும் 12 மணிக்கு மாநிலங்களவை கூடிய நிலையில் அவைத்தலைவர் ராஜேந்திர அகர்வாலை முற்றுகையிட்டு எதிர்கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர். இதனால்  2 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதேபோல் மக்களவையிலும், அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பாஜக உறுப்பினர்களை பேசவிடாமல் எதிர்கட்சிகள் கோஷம் எழுப்பினர். சபாநாயகர் ஓம்பிர்லாவை மறைத்து பதாகைகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மக்களவையும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை தொடங்கியதும் கூச்சல் குழப்பம் நீடித்ததால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இதனிடையே மாநிலங்களவையில் அவை தலைவர் இருக்கைக்கு அருகே சென்று அமளியில் ஈடுபட்டதால் ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், மழைக்கால கூட்டத்தொடர் முடியும் வரை ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் பங்கேற்க தடை விதித்து ஜெகதீப் தன்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com