”பட்டியலினத்தவர் என்பதால் துன்புறுத்தல்”ககன் தீப் சிங் பேடி மீது ஐஏஎஸ் அதிகாரி பரபரப்பு புகார்...!

”பட்டியலினத்தவர் என்பதால் துன்புறுத்தல்”ககன் தீப் சிங் பேடி மீது ஐஏஎஸ் அதிகாரி பரபரப்பு புகார்...!
Published on
Updated on
2 min read

சுகாதாரத்துறை செயலாளராக இருக்கும் ககன் தீப் சிங் பேடி மீது ஈரோடு கூடுதல் ஆட்சியர் மணீஸ் நரவனே பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். 


திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை செயலாளராக இருக்கும் ககன் தீப் சிங் பேடி மீது ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பகீர் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மூத்த மற்றும் முக்கிய ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கும் ககன் தீப் சிங் பேடி, திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி தனக்கென்று ஒதுக்கப்படும் துறைகளில் தனக்கான பணிகளை சிறப்பாக செயல்படுத்தி பாராட்டுகளை பெற்றவர். அதுமட்டுமல்லாமல், சுனாமி, மழை, வெள்ளம் என அனைத்து பேரிடர்களிலும் களப்பணியாற்றியதில் முக்கிய பங்காற்றியுள்ளார். ஆனால், இவர் மீது இதுவரை எந்தவித புகாரும் வெளியாகமல் இருந்த நிலையில், தற்போது அவரின் கீழ் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரியே புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஆட்சியில் வேளாண் துறை செயலாளராக இருந்த ககன் தீப் சிங், திமுக ஆட்சியில் முதலில் சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். பிறகு சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த போது, அவருக்கு கீழ் துணை ஆணையராக மணீஸ் நரவனே நியமிக்கப்பட்டார். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஈரோடு கூடுதல் ஆட்சியராக பணியாற்றி வரும் மணீஸ் நரவனே, சுகாதாரத்துறை செயலாளராக இருக்கும் ககன் தீப் சிங் மீது புகார் தெரிவித்துள்ளார். இது புகார் தொடர்பாக, தலைமைச் செயலாருக்கு 2 பக்கங்கள் கொண்ட அறிக்கையையும் அனுப்பியுள்ளார். அதில், சென்னை மாநகராட்சியில் துணை ஆணையராக இருந்த என்னை, பட்டியலினத்தை சார்ந்தவன் என்பதால் ககன் தீப் சிங் பேடி துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். 

மேலும், சென்னை மாநகராட்சி சார்பாக இந்தூர் மாநகராட்சிக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, நீ புத்த மதத்தைப் பின்பற்றிக் கொண்டு ஏன் உஜ்ஜெய்ன் கோயிலுக்கு செல்கிறாய் என்று கேட்டு காயப்படுத்தியதாகவும், அதிகாரிகள் கூட்டத்தில் வேண்டுமென்றே என்னை திட்டி அவமானப்படுத்தி, உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்குனதாக தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கும் தனக்கும் பிரச்னையை உருவாக்க ககன்தீப் சிங் பேடி முயற்சி செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மாநகராட்சியின் கோப்புகளில் வேண்டுமென்றே கையெழுத்திடாமல் இரவு வரை காத்திருக்க செய்ததாகவும் விமர்சித்துள்ளார்.

ஒரு ஐஏஎஸ் அதிகாரியாகவும், மூத்த அதிகாரியாகவும் இருந்து கொண்டு அவர் செய்த இந்த செயல்கள் அனைத்துமே எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது. எனவே, சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என்று மணீஸ் நரவனே பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, இந்த புகார் தொடர்பான அறிக்கையையும் மணீஸ் நரவனே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், மணீஸ் நரவனே தனது ட்விட்டர் பதிவை நீக்கியுள்ளார். இதற்கு மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தம் கூட காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com