விருதுநகரில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி, அண்ணாவை திமுக மறந்துவிட்டதாகவும், அண்ணாவின் பெயரையும் புகழையும் குப்பையில் தூக்கி போட்டு விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
அண்ணாவை மறந்த திமுக:
விருதுநகரில் அ.இ.அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அண்ணாவின் பெயரை சொல்லி குறுக்கு வழியில் கட்சியை கைப்பற்றி ஆட்சிக்கு வந்த திமுக அண்ணாவின் பெயரையும் புகழையும் குப்பையில் தூக்கி போட்டு விட்டதாக திமுகவை சாடி பேசினார். மேலும், வாக்களித்த மக்களையும், தாய்மார்களைப் பற்றி சிந்திக்காமல் அதிமுக ஆட்சியில் இருந்த தாலிக்கு தங்கம் திட்டம், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம் ஆகியவை கைவிடப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். அதேபோன்று முதியோர் மற்றும் விதவை பென்ஷன் பாதிக்கு மேல் குறைந்துவிட்டதாகவும் கூறினார். இப்படி ஓட்டு போட்ட மக்களை சிந்திக்காமல் தன் குடும்ப வளர்ச்சியை மட்டும் பார்க்கும் திமுக விடிகின்ற அரசா? இல்லை விடியா அரசு என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
அதிமுக ஆட்சியில் விலைவாசி அதிகரிக்கவில்லை:
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சொத்துவரி, மின்கட்டண வரி, குடிநீர் கட்டண வரி என எல்லா விலைவாசியும் அதிகரித்துவிட்டது. அதிமுக ஆட்சியில் பத்து ஆண்டுகளில் ஏதாவது விலையை உயர்த்தினோமா? என்று கேள்வி எழுப்பிய அவர், திமுக ஆட்சியில் எல்லா விலைவாசியும் ஏறிவிட்டது. அதை எதிர்த்து யாராவது பேசினால் உடனே சிறைச்சாலை. இந்த நிலையில் இனி தமிழகத்தில் திமுக தான் ஆளும் என்கிறார் மு.க.ஸ்டாலின் வேடிக்கையாக இருக்கிறது என்று விமர்சித்தார்.
2024 ல் சட்டமன்ற தேர்தல்:
இதனைத்தொடர்ந்து, ”திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் நீட் தேர்வை ஒழிக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு முதல் கையெழுத்து போடுவோம் என்றார்கள். ஆனால் இப்போ அவர்களிடம் பேனா இல்லை போல; அதற்கு பதிலாக எழுதாத பேனா, மையில்லாத பேனாவுக்கு மட்டும் மத்திய அரசிடம் போராடி அனுமதி வாங்குகிறார்கள்;
அதேபோன்று நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு வாங்க வேண்டியதுதானே. செய்ய
முடியாதவற்றையெல்லாம் செய்வதாக சொன்னீர்களே. அதை செய்ய முயற்சியாவது செய்தீர்களா” என்று சாடினார். இனி உங்கள் ஆட்டம் அதிக பட்சம் ஒருவருடம் தான். ஏனென்றால், 2024 ல் வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது சட்டமன்றத் தேர்தலும் நிச்சயம் நடைபெறும்; அதுவரை அதிகமு தொண்டர்களை சீண்டாதீர்கள் என்று கே டி ராஜேந்திர பாலாஜி திமுகவை எச்சரித்து பேசியுள்ளார்.